அக்டோபர் 2023 முதல் 31% இந்திய மசாலாக்கள் ஏற்றுமதியை நிராகரித்தது அமெரிக்கா
சால்மோனெல்லா மாசுபாட்டின் காரணமாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த மஹாஷியன் டி ஹட்டி(MDH) பிரைவேட் லிமிடெடின் மசாலா பொருட்களின் ஏற்றுமதிகள் குறைந்துள்ளன. அக்டோபர் 2023 முதல் 31% இந்திய மசாலாக்கள் ஏற்றுமதியை அமெரிக்கா நிராகரித்துள்ளது. இந்திய மசாலா தயாரிப்பாளர்களான MDH மற்றும் எவரெஸ்டின் சில தயாரிப்புகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில், அமெரிக்க சுங்க அதிகாரிகள் 31% MDH இன் மசாலா ஏற்றுமதிகளை நிராகரித்துள்ளனர். இது முந்தைய ஆண்டில் 15% ஆக இருந்தது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
MDH மற்றும் எவரெஸ்ட் பொருட்களை தடை செய்த சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்
இதற்கிடையில், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய இரண்டும் MDH மற்றும் எவரெஸ்ட் ஆகியவற்றின் சில மாசா பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லி கண்டறியப்பட்டதாக கூறியுள்ளது. எனவே, MDH மற்றும் எவரெஸ்ட் ஆகியவற்றின் சில பொருட்களின் விற்பனையை அந்த இரு நாடுகளும் தடை செய்துள்ளன. இந்நிலையில், MDH மசாலா பொருட்களின் ஏற்றுமதியை அமெரிக்கா குறைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், MDH மற்றும் எவரெஸ்ட் தயாரிப்புகள் பற்றிய தகவல்களை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) சேகரித்து வருகிறது. ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரின் நடவடிக்கைகளை அடுத்து, இந்தியாவில் மிகவும் பிரபலமான இரண்டு மசாலா பிராண்டுகளான MDH மற்றும் எவரெஸ்ட்டை இந்திய அரசாங்கமும் கண்காணித்து வருகிறது.