LOADING...
உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக ஆகஸ்ட் 15 ஆம் தேதி புடினை சந்திக்கிறார் டிரம்ப்
ஆகஸ்ட் 15 ஆம் தேதி புடினை சந்திக்கிறார் டிரம்ப்

உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக ஆகஸ்ட் 15 ஆம் தேதி புடினை சந்திக்கிறார் டிரம்ப்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 09, 2025
08:20 am

செய்தி முன்னோட்டம்

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஆகஸ்ட் 15 ஆம் தேதி அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். "அமெரிக்காவின் ஜனாதிபதியாக எனக்கும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் இடையிலான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு, அடுத்த வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 15, 2025 அன்று அலாஸ்காவின் பெரிய மாநிலத்தில் நடைபெறும்" என்று டிரம்ப் ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவில் கூறினார். ரஷ்ய செய்தி நிறுவனமான TASS இன் படி, கிரெம்ளினின் உதவியாளர் யூரி உஷாகோவை மேற்கோள் காட்டி கிரெம்ளினும் சந்திப்பை உறுதிப்படுத்தியது .

பேச்சுவார்த்தை

"நிலப்பரப்பை ஒப்படைக்க வேண்டி இருக்கும்"

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உள்ளிட்டவர்கள் மூன்றரை ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தை நெருங்கிவிட்டதாகவும், இதனால் உக்ரைன் கணிசமான நிலப்பரப்பை சரணடைய வேண்டியிருக்கும் என்றும் டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்தார். முன்னதாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஒப்பந்தத்தில் சில நிலப் பரிமாற்றங்கள் அடங்கும் என்று தெரிவித்தார். "இரு நாடுகளின் முன்னேற்றத்திற்காக சில பிரதேசங்களை சமரசம் செய்யவேண்டியது இருக்கும்" என்று டிரம்ப் கூறினார். வெள்ளை மாளிகையில் ஆர்மீனியாவிற்கும், அஜர்பைஜானுக்கும் இடையிலான சமாதான கட்டமைப்பை டிரம்ப் முன்வைத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்தது.

அலாஸ்கா

புடினின் அலாஸ்கா பயணம்

ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற பிறகு டிரம்ப் புடினை நேரில் சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும். அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள அலாஸ்காவைத் தேர்ந்தெடுப்பது, பேச்சுவார்த்தைகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. புடினின் அலாஸ்கா பயணம், ஒரு தசாப்தத்தில் அவர் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணமாகும். அவர் கடைசியாக 2015 செப்டம்பரில் அந்நாட்டிற்கு விஜயம் செய்தார், நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி பராக் ஒபாமாவைச் சந்தித்தார். வெளியுறவுத்துறையின் கூற்றுப்படி, ரஷ்யாவின் தலைவராக புடினின் முதல் அமெரிக்க பயணம் 2000 ஆம் ஆண்டு, ஐ.நா. மில்லினியம் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி பில் கிளிண்டனை சந்தித்தபோது நடந்தது.