ஏமனிலிருந்து இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை தடுத்த அமெரிக்க போர் கப்பல்
ஏமன் நாட்டில் செயல்பட்டு வரும் ஹூதி இயக்கம், இஸ்ரேல் நோக்கி ஏவிய ஏவுகணைகளை அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான கப்பல் தடுத்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யுஎஸ்எஸ் கார்னி போர்க்கப்பலானது, வடக்கு செங்கடலில் இயங்கிக் கொண்டிருந்த போது இந்த ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியது. இது குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் பிரிகேடியர் ஜெனரல் பேட்ரிக் ரைடர் கூறுகையில், ஏமனில் இருந்து ஏவப்பட்ட 3 தரைவழி தாக்குதல் ஏவுகணைகள் மற்றும் பல ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்தார். "இந்த ஏவுகணைகளும், ட்ரோன்களும் எதை நோக்கி ஏவப்பட்டது என உறுதியாக சொல்ல முடியாது. அவை ஏமன் நாட்டில் இருந்து ஏவப்பட்டு செங்கடல் வழியாக இஸ்ரேலை தாக்கலாம்" என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து தாக்கப்படும் அமெரிக்கப் படைகள்
ஈராக்கில் செயல்பட்டு வரும் போராளி குழுக்கள் இஸ்ரேலுக்கு, அமெரிக்க ஆதரவளிப்பதை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். ஈராக் மற்றும் சிரியா பகுதியில் முகாமிட்டுள்ள அமெரிக்கப் படைகள், சமீபகாலமாக தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதாக பென்டகன் தெரிவித்துள்ளது. ஈராக்கில், அமெரிக்க மற்றும் வெளிநாட்டு படையினரின் முகாம்கள் மீது ஏவப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் சிறிய அளவிலான படை வீரர்கள் காயமடைந்தனர். அதேபோல் கடந்த புதன்கிழமை அன்று, சிரியாவில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகளை, ட்ரோன் தாக்கியதில் வீரர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.