அமெரிக்க இடைத்தேர்தல் & இஸ்ரேல் தேர்தல் முடிவுகளால் ஈரான் போர் முடிவு வருமா?
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி பெற்றுள்ள மாபெரும் வெற்றி மற்றும் இஸ்ரேலில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆளும் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது ஆகிய இரு நிகழ்வுகளும், கடந்த 8 மாதங்களாக நீடித்து வரும் அமெரிக்க-இஸ்ரேல் எதிர் ஈரான் போரின் போக்கை மாற்றியமைக்கும் நிலையை உருவாக்கியுள்ளன. இவ்விரு அரசியல் மாற்றங்களும் வாஷிங்டன் மற்றும் ஜெருசலேமில் உள்ள தற்போதைய தலைமைகளுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதால், ஈரானுடன் ராஜதந்திர பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன.
அமெரிக்கா
அமெரிக்காவில் ட்ரம்ப்பிற்கான அரசியல் முட்டுக்கட்டைகள்
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரு அவைகளையும் ஜனநாயகக் கட்சியினர் கைப்பற்றியுள்ளனர்.
ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் விநியோகம் தடைபட்டு, அமெரிக்காவில் எரிபொருள் விலையும் வாழ்க்கை செலவும் கணிசமாக உயர்ந்தது. இதுவே குடியரசுக் கட்சியின் தோல்விக்கு முக்கியக் காரணியாக அமைந்தது.
போருக்கான ராணுவச் செலவினங்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் மீது ஜனநாயகக் கட்சியினர் தணிக்கை மற்றும் விசாரணைகளை தீவிரப்படுத்துவர்.
நாடாளுமன்ற கட்டுப்பாடு கை மாறினாலும், ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி என்ற முறையில் போரைத் தொடர்வது அல்லது நிறுத்துவது குறித்த இறுதி அதிகாரத்தை அதிபர் ட்ரம்ப் தன்வசம் வைத்துள்ளார்.
நெதன்யாகு
இஸ்ரேலில் நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி
அக்டோபர் 27 அன்று நடைபெற்ற 120 இடங்களை கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்ற தேர்தலில், நெதன்யாகுவின் வலதுசாரிக் கூட்டணிக்கோ அல்லது காடி ஐசென்காட் தலைமையிலான எதிர்க்கட்சிக்கோ பெரும்பான்மைக்கு தேவையான 61 இடங்கள் கிடைக்கவில்லை.
தற்போது இடைக்காலப் பிரதமராக நெதன்யாகு நீடிக்கும் நிலையில், இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் புதிய அரசை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளார்.
இஸ்ரேலில் உருவாகும் புதிய அரசு, ஈரானுடனான போரை கையாளுவதில் மாறுபட்ட அணுகுமுறையைக் கொண்டிருக்கக்கூடும்.
ஈரான்
ஈரானின் நிலைப்பாடு: அமைதிப் பேச்சுவார்த்தை vs புதிய போர் எச்சரிக்கை
ஈரான் தரப்பில் கத்தார் நாட்டின் தோஹாவில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான விருப்பங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்கா தனது நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டால், ஹார்முஸ் நீரிணையை 2 நாட்களில் மீண்டும் திறந்து, அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கத் தயார் என ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவும் பேச்சுவார்த்தைகள் தொடர்வதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதே வேளையில், ஈரானின் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனி, அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ மீண்டும் தாக்குதலைத் தொடங்கினால், எவ்வித புவியியல் எல்லைகளும் இன்றி ஈரான் உடனடியாக மிகக் கடுமையான பதில் தாக்குதலைத் தொடுக்கும் என எச்சரித்துள்ளார்.