பெண் தொழிலாளர்கள் பற்றிய புரிதலை மேம்படுத்திய அமெரிக்க அறிஞருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு
2023 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க பொருளாதார அறிஞரான கிளாடியா கோல்டினுக்கு வழங்கப்பட்டுள்ளது. "பெண் தொழிலாளர்கள் பற்றிய புரிதலை மேம்படுத்தியதற்காக" அவருக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது என்று ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் தெரிவித்துள்ளது. இந்த நோபல் பரிசு வழங்க தொடங்கியதில் இருந்து(1969), 3 பெண்களுக்கு மட்டுமே பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பெற்ற எலினோர் ஆஸ்ட்ரோம் மற்றும் 2019ஆம் ஆண்டில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பெற்ற எஸ்தர் டுஃப்லோ ஆகிய இருவர் மட்டுமே இந்த பரிசை பெற்ற பெண்கள் ஆவர். எனவே, பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசை பெறும் 3வது பெண் என்ற பெருமை கிளாடியா கோல்டினுக்கு கிடைத்துள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகளை பெற்றவர்கள்
கடந்த வாரம், 5 துறைகளுக்கான நோபல் பரிசுகள்-2023 அறிவிக்கப்பட்டன. கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடிக்க வழிவகுத்தற்காக காடலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் என்ற இருவருக்கு நோபல் மருத்துவப் பரிசு வழங்கப்பட்டது. பொருளின் எலக்ட்ரான் இயக்கவியல் தொடர்பான ஆய்வை மேற்கொண்டதற்காக பியர் அகோஸ்டினி, ஃபெரெங்க் க்ரவ்ஸ் மற்றும் ஆனி எல்'ஹுல்லியர் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்த, மௌங்கி பாவெண்டி, லூயிஸ் புரூஸ் மற்றும் அலெக்ஸி எகிமோவ் ஆகிய மூவருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இலக்கியத்திற்கான நோபல் பரிசு நார்வே நாட்டின் எழுத்தாளர் ஜான் ஃபோர்ஸுக்கு வழங்கப்பட்டது. பெண்களின் அடக்குமுறைக்கு எதிராக போராடிய ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.