இஸ்ரேல் ஈரானை தாக்கப்போவது அமெரிக்காவுக்கு முன்பே தெரியும்
இஸ்ரேல் மீது ஈரான் 300 எறிகணைகளை வீசி தாக்குதல் நடத்திய சில நாட்களுக்குள், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இஸ்ஃபஹானில் உள்ள ராணுவ தளத்திற்கு அருகே மூன்று குண்டுவெடிப்புகள் கேட்டதாக ஈரான் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் பாதுகாப்பு அமைப்பு மூன்று ட்ரோன்களை வானத்திலேயே சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பழிவாங்குவதாக ஈரான் சபதம் செய்ததது. சபதம் செய்தது போலவே ஈரான், இஸ்ரேல் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியது.
அமெரிக்கா இந்த தாக்குதலுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை
இந்நிலையில், இன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. தனது நாட்டின் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலுக்கும் தனது நாடு கடுமையான பதிலடி கொடுக்கும் என்று ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி ஏற்கனவே எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலின் தாக்குதலை அடுத்து, இஸ்பஹான் மாகாணத்தில் உள்ள அணுசக்தி நிலையங்கள் பாதிப்பில்லாமல் இருப்பதாக ஈரானின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கையாக தெஹ்ரான், ஷிராஸ் மற்றும் இஸ்பஹான் விமான நிலையங்களில் விமான சேவை நிறுத்தப்பட்டது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு முன்னதாகவே இது குறித்து அமெரிக்காவுக்கு தகவல் கிடைத்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், அமெரிக்கா இந்த தாக்குதலுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் அதில் பங்கேற்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.