LOADING...
அமெரிக்காவில் 'முத்தமிடும் பூச்சி' பரவலால் சாகஸ் நோய் அதிகரிப்பதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை
அமெரிக்காவில் 'முத்தமிடும் பூச்சி' பரவலால் சாகஸ் நோய் அதிகரிப்பதாக எச்சரிக்கை

அமெரிக்காவில் 'முத்தமிடும் பூச்சி' பரவலால் சாகஸ் நோய் அதிகரிப்பதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Sep 05, 2025
04:45 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் 32 மாகாணங்களில் 'முத்தமிடும் பூச்சிகள்' (kissing bugs) என அழைக்கப்படும் டிரையாடோமைன் பூச்சிகளின் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த பூச்சிகள், சாகஸ் நோயைப் பரப்புகின்றன. இது இதயம் தொடர்பான கோளாறுகள், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற அபாயகரமான விளைவுகளுக்கு வழிவகுக்கும். இந்த பூச்சிகள், மக்கள் தூங்கும்போது, முகம் மற்றும் உதடுக்கு அருகில் கடித்து ரத்தத்தைக் குடிப்பதால், "முத்தமிடும் பூச்சிகள்" எனப் பெயரிடப்பட்டுள்ளன. இவை லத்தீன் அமெரிக்க நாடுகளில் பொதுவாகக் காணப்படுகின்றன. அமெரிக்காவில் டெக்சாஸ், நியூ மெக்சிகோ மற்றும் அரிசோனா போன்ற மாகாணங்களில் அதிகமாக உள்ளது. கிருமி தொற்றிய பூச்சி கடித்த பிறகு, அது கழிவுகளை வெளியேற்றும். இந்த கழிவுகளிலிருந்து ஒட்டுண்ணி உடலுக்குள் நுழைவதால் சாகஸ் நோய் பரவுகிறது.

சாகஸ் நோய்

சாகஸ் நோய் இரண்டு கட்டங்களாக வளர்கிறது

கடுமையான கட்டம் (ஆரம்ப நிலை): பலருக்கு அறிகுறிகள் தெரியாது. சிலருக்கு காய்ச்சல், உடல் வலி மற்றும் கடிபட்ட இடத்தில் வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும். ரோமானாஸ் சைன் (Romana's sign) எனப்படும் கண்ணிமை வீக்கம் இந்த நோயின் முக்கிய அறிகுறியாகும். நாள்பட்ட கட்டம் (தீவிர நிலை): பல ஆண்டுகளுக்குப் பிறகு, 20-30% நோயாளிகளுக்கு இதயப் பிரச்சனைகள், இதயச் செயலிழப்பு மற்றும் மாரடைப்பு போன்ற கடுமையான சிக்கல்கள் ஏற்படும். ஆரம்ப கட்டத்தில் பென்சனிடசோல் (benznidazole) மற்றும் நிஃபர்டிமோக்ஸ் (nifurtimox) போன்ற மருந்துகள் இந்த நோயைக் குணப்படுத்த உதவும். ஆனால், நோய் நாள்பட்ட நிலையை அடைந்தால், சிகிச்சை அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்கே மட்டுமே உள்ளது.

கட்டுப்படுத்தல்

கட்டுப்படுத்தலுக்கான சிறந்த வழி

இந்த நோய் பரவலைத் தடுக்க, பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதே சிறந்த வழி என நிபுணர்கள் கூறுகின்றனர். பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்துதல், வீடுகளில் உள்ள விரிசல்களை மூடுதல், மற்றும் பூச்சிகளைக் கையுறைகளுடன் கையாளுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என அமெரிக்காவின் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.