அமெரிக்காவில் 3-வது நாளாக தொடரும் விமானச் சேவை பாதிப்பு: 2,100 விமானங்கள் ரத்து, 9,400 விமானங்கள் தாமதம்
செய்தி முன்னோட்டம்
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் (FAA) நாடு தழுவிய அளவில் விமானங்களை தரையிறக்கியதன் எதிரொலியாக, ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து 3-வது நாளாக அமெரிக்காவில் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விமான போக்குவரத்து கண்காணிப்புத் தளமான ஃபிளைட்அவேர் தரவுகளின்படி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுமார் 2,100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், 9,400 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ஒரே நாளில் 1,500-க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிப்பு
எந்தெந்த விமான நிறுவனங்களுக்கு அதிக பாதிப்பு?
வெள்ளிக்கிழமை 9,201 விமானங்களும், சனிக்கிழமை 6,697 விமானங்களும் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை பாதிப்பு சற்று குறைந்திருந்தது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அதிகபட்சமாக 805 விமானங்களை (மொத்த அட்டவணையில் 13%) ரத்து செய்தது.
டெல்டா ஏர்லைன்ஸ், 360 விமானங்களை (7%) ரத்து செய்தது.
திங்கட்கிழமை முதல் விமானச் சேவைகள் முழுத் திறனுடன் இயல்பு நிலைக்குத் திரும்பும் என அமெரிக்க போக்குவரத்துத் துறை செயலாளர் சீன் டஃபி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பக் கோளாறு
25 ஆண்டுகளில் மிகப்பெரிய முடக்கம்: தொழில்நுட்பக் கோளாறு என்ன?
கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத வகையில் வெள்ளிக்கிழமை சுமார் 4 மணி நேரம் அமெரிக்க வான்வெளியில் விமானங்கள் நிறுத்தப்பட்டதற்கு, பழமையான ATC அமைப்பில் ஏற்பட்ட தரவுப் பெருக்கமே காரணம் என FAA கண்டறிந்துள்ளது.
ஆர்கன்சாஸ் மாகாணம் எல் டொராடோவில் உள்ள ரேடியோ தகவல் தொடர்பு மையத்தில், பழைய செப்புக் கம்பிகளுக்கு பதிலாக புதிய ஃபைபர் கம்பிகளை மாற்றி ரூட்டரை இயக்கியபோது தொழில்நுட்பச் சிக்கல் எழுந்துள்ளது.
இது டெக்சாஸ் மாகாணம் அமரில்லோவில் உள்ள ரேடார் மையத்திலும் எதிரொலித்ததால், தகவல் தொடர்பு மற்றும் ரேடார் சிக்னல்களில் இடையூறு ஏற்பட்டு நாடு முழுவதும் விமானங்களை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.