காலிஸ்தான் பயங்கரவாதி விவகாரம்: கனடாவுக்கு உதவிய 'ஐந்து கண்கள்' உளவுத்துறை
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க கனடாவுக்கு 'ஐந்து கண்கள்' உளவுத்துறை ஆதரவு வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறது என்ற முடிவுக்கு கனடா வருவதற்கு 'ஐந்து கண்கள்' உளவுத்துறை தான் காரணாமாக இருந்தது என்று கனடாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் கோஹன் கூறியுள்ளார். கனடா செய்தி நிறுவனமான CTV செய்தி சேனலுக்கு பேட்டியளித்திருந்த கனடாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் கோஹன் இந்த தகவலை தெரிவித்துள்ளார். "இந்த கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இது குறித்து நிறைய தொடர்புகள் இருந்தன. இதற்கு மேல் என்னால் எதுவும் சொல்ல முடியாது" என்று அமெரிக்க தூதர் மேலும் கூறியுள்ளார்.
இந்தியா கனடாவுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர்
'ஐந்து கண்கள்' நெட்வொர்க் என்பது அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய உளவுத்துறை கூட்டணியாகும். கடந்த ஜூன் மாதம் உயிரிழந்த காலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த திங்கள்கிழமை கனடா குற்றம் சாட்டியது. ஜூன் மாதம், காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்யும் "நம்பகமான குற்றச்சாட்டுகள்" இருப்பதாக கனட நாடாளுமன்ற அமர்வின் போது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார். இதனையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியா கனடாவுக்கு ஒத்துழைத்து பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியிருந்தார்.