ஈரானுக்கு எதிராக 'Mother of All Bombs' பயன்பாடு குறித்து அமெரிக்கா பரிசீலனை: நிபுணர்கள் எழுப்பும் சந்தேகம் என்ன?
செய்தி முன்னோட்டம்
ஈரானுடன் நிலவும் மோதல்களுக்கு முடிவுகட்டும் வகையில், அமெரிக்க இராணுவம் தனது ஆயுதக் களஞ்சியத்திலுள்ள சக்திவாய்ந்த வழக்கமான குண்டான GBU-43/B 'மாஸ் ஆர்டன்ஸ் ஏர் பிளாஸ்ட்' (MOAB) எனப்படும் 'Mother of All Bombs' ஆயுதத்தை ஈரானுக்கு எதிராக பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், மலைப்பகுதிகளுக்கு அடியில் மிகவும் பாதுகாப்பாக அமைந்துள்ள ஈரானின் அணுசக்தித் தளங்களை இதனால் முழுமையாக அழிக்க முடியுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. சுமார் 21,600 பவு எடைக் கொண்ட (9,800 கிலோ) இந்த MOAB குண்டு, அமெரிக்க இராணுவத்திடம் உள்ள அணு ஆயுதம் அல்லாத மிகப்பெரிய வழக்கமான குண்டாகும்.
விவரங்கள்
'Mother of All Bombs' என்றால் என்ன?
வழக்கமான பன்கர்-பஸ்டர் குண்டுகள் போல நிலத்திற்குள் ஆழமாகச் சென்று வெடிக்காமல், தரைக்குச் சற்று மேலே வளிமண்டலத்தில் வெடித்து மிகப்பரந்த அளவில் பேரழிவை ஏற்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் வெடிப்புத் திறன் சுமார் ஒன்பது நகர தொகுதிகளின் பரப்பளவை நிலைகுலையச் செய்யக்கூடியது.
டொனால்ட் ட்ரம்பின் முதல் அதிபர் பதவிக்காலத்தின்போது, கடந்த 2017 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் (IS) பயங்கரவாதிகளின் சுரங்க வளாகத்தின் மீது முதல்முறையாக இக்குண்டு களத்தில் பயன்படுத்தப்பட்டது.
சவால்கள்
Pickaxe மலைத் தளங்களை அழிக்க முடியுமா?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் முக்கிய குறிக்கோளாக உள்ள, நிலத்தடியில் மிகவும் ஆழமான கிரானைட் பாறைகளுக்கு அடியில் பாதுகாக்கப்பட்டுள்ள Pickaxe மலை அணுசக்தி தளத்தின் மீது இக்குண்டைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
MOAB குண்டு பரந்த நிலப்பரப்பை தரைமட்டமாக்க சிறந்தது என்றாலும், அது தரைக்கு அடியில் பாறைகளை துளைத்துச் சென்று தாக்கும் வகையில் உருவாக்கப்படவில்லை.
எனவே, அடர்ந்த கிரானைட் பாறைகளுக்குள் நூற்றுக்கணக்கான அடி ஆழத்தில் அமைந்துள்ள இரகசிய அணுசக்தி மையங்களை இதனால் கடுமையாக பாதிக்க முடியுமா என்பதில் பாதுகாப்பு நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
வியூகம்
அமெரிக்காவின் வியூகமும் அரசியல் அழுத்தமும்
நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஈரானுடன் நீடிக்கும் மோதலை முடிவுக்குக் கொண்டுவரவும், உள்நாட்டில் அரசியல் அழுத்தங்களைச் சமாளிக்கவும் டிரம்ப் நிர்வாகம் பல்வேறு மாற்றுத் தாக்குதல் திட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இராணுத் தளங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு இந்தத் திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தாலும், மக்கள் நெருக்கடிமிக்க பகுதிகளுக்கு அருகில் இதைப் பயன்படுத்துவது பெருமளவிலான பொதுமக்களின் உயிரிழப்புக்கும் வழிவகுக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
ஈரானுக்கு எதிரான இந்த அதிரடி நகர்வு மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.