அடுத்த இலக்கு கியூபாவா? 120 நாட்களில் சிறப்புப் படைகளைத் திரட்ட அமெரிக்கா திட்டம்; கரீபியன் பிராந்தியத்தில் பதற்றம்
செய்தி முன்னோட்டம்
கரீபியன் பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவம் தனது அவசரகாலத் தயார்நிலையை அமைதியாக அதிகரித்து வருகிறது. அடுத்த 90 முதல் 120 நாட்களுக்குள் அமெரிக்க தெற்கு மண்டலக் கட்டளைக்கு (SOUTHCOM) பயன்படும் வகையில், 6 முக்கிய பிரிவு ராணுவ படைகளைத் திரட்ட முடியுமா என அமெரிக்க ராணுவ ரிசர்வ் தனது கீழ்நிலைப் படைகளிடம் ஆய்வு செய்து வருகிறது. இந்த அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கியூபாவின் பெயர் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. எனினும், சிபிஎஸ் நியூஸ் அறிக்கையின்படி இது கியூபாவை மையமாகக் கொண்ட ராணுவத் திட்டமிடலே என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறப்புப் படைகள்
அமெரிக்க ராணுவ ரிசர்விடம் கேட்கப்பட்டுள்ள சிறப்புப் படைகள்
அமெரிக்க ராணுவ ரிசர்விடம் கோரப்பட்டுள்ள படைகளின் விவரங்கள், அமெரிக்காவின் திட்டமிடல் எவ்வளவு பெரியது என்பதை உணர்த்துகின்றன.
இதில் எரிபொருள், பராமரிப்பு மற்றும் போக்குவரத்தைக் கவனிக்கும் காம்பாட் சஸ்டைன்மென்ட் சப்போர்ட் பட்டாலியன் மற்றும் பொறியியல் படைகள் அடங்கும்.
மேலும், அவசர காயங்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவப் பிரிவுகள், கள அறுவை சிகிச்சைக் குழுக்கள் மற்றும் பாதுகாப்பு, சிறை மேலாண்மை மற்றும் சட்ட அமலாக்கப் பணிகளைக் கவனிக்கும் ராணுவ போலீஸ் பிரிகேட் ஆகியவையும் கோரப்பட்டுள்ளன.
கியூபா
கியூபா மீதான அமெரிக்காவின் தொடர் ராணுவ மற்றும் பொருளாதார அழுத்தங்கள்
கடந்த சில மாதங்களாகவே கியூபாவை சுற்றியுள்ள கடல் பகுதிகள் மற்றும் வான்வெளிகளில் அமெரிக்கப் படைகள் உளவு மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
மேலும், 101-வது ஏர்போர்ன் பிரிவை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்களைப் பயன்படுத்தி வான்வழித் தாக்குதல் நடத்துவது குறித்த விருப்பங்களையும் பென்டகன் திட்டமிட்டிருந்தது.
அடுத்த இலக்கு கியூபா தான் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்த நிலையில், கியூபா மீது பொருளாதாரத் தடைகள் தீவிரப்படுத்தப்பட்டு, அங்கு அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
ராணுவ அணி திரட்டல் அல்ல
அவசரகால முன்னேற்பாடே என விளக்கம்
தற்போது வெளியாகியுள்ள இந்த உத்தரவுடனான கடிதம் உடனடியாக படைகளை அனுப்புவதற்கான உத்தரவு அல்ல என்றும், அவசர காலத்தில் குறுகிய காலத்தில் படைகளைத் திரட்டுவதற்கான முன் ஆய்வு மட்டுமே என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
ஐநா பொதுச்சபையில் பேசிய டிரம்ப், கியூபாவின் கம்யூனிச அரசு வீழும் எனக் கூறியதற்கு, கியூபா அதிபர் மிகுவல் டயஸ்-கானல் தங்களின் நாடு எந்தவொரு அமெரிக்கத் தாக்குதலையும் உறுதியுடன் எதிர்கொள்ளும் என எச்சரித்துள்ளார்.
இருப்பினும், கரீபியன் பகுதியில் அமெரிக்கா தனது ராணுவ பலத்தை படிப்படியாக அதிகரித்து வருகிறது.