Loading...
ஞாயிறு இரவுக்குள் அமெரிக்க விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பும் என அறிவிப்பு
ஞாயிறு இரவுக்குள் அமெரிக்க விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பும் என அறிவிப்பு

ஞாயிறு இரவுக்குள் அமெரிக்க விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பும் என அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 15, 2026
09:01 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வரலாறு காணாத நாடு தழுவிய விமானப் போக்குவரத்து முடக்கத்தைத் தொடர்ந்து, சனிக்கிழமையும் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் உலகம் முழுவதும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் அமெரிக்க விமானப் போக்குவரத்து அட்டவணை முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பும் என ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) நிர்வாகி பிரையன் பெட்ஃபோர்ட் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை சில தாமதங்கள் நீடித்தாலும் மிக மோசமான நெருக்கடி கடந்துவிட்டதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தொழில்நுட்பக் கோளாறு

பழைய செப்புக் கம்பிகளை ஃபைபர் ஆப்டிக் கம்பிகளாக மாற்றியதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு

விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் பழைய செப்புக் கம்பிகளை அகற்றிவிட்டு புதிய ஃபைபர் ஆப்டிக் கம்பிகளை பொருத்தும் பணியை ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்ட போது இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்ப உபகரணம் பழமையான கருவிகளுடன் இணைந்த போது அதிகப்படியான தரவு அழுத்தம் ஏற்பட்டு, ரேடார் மற்றும் தகவல் தொடர்புகளில் இடையூறு உண்டானதாக போக்குவரத்து செயலர் சீன் டஃபி விளக்கமளித்துள்ளார்.

ஒப்பந்ததாரரின் கவனக்குறைவா அல்லது பழுதடைந்த கம்பியா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விமானங்கள் ரத்து

9/11 தாக்குதலுக்குப் பின் ஏற்பட்ட மிகப்பெரிய நிறுத்தமும் பல்லாயிரக்கணக்கான விமான ரத்துகளும்

கடந்த 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு சுமார் 25 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய விமானப் போக்குவரத்து முடக்கமாக இது பதிவாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக புறப்பாடுகள் நிறுத்தப்பட்டதால், ஒரு நாளைக்கு இயக்கப்படும் 45,000 விமானங்களில் கால் பகுதிக்கும் மேலானவை கடுமையாக பாதிக்கப்பட்டன.

ஃபிளைட்அவேர் (FlightAware) தரவுகளின்படி வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை சேர்த்து பல்லாயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதோடு, லண்டன் ஹீத்ரோ உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களிலும் பாதிப்பு எதிரொலித்தது.

ADVERTISEMENT

சைபர் தாக்குதல்

சைபர் தாக்குதல் இல்லை என விளக்கமும் நவீனமயமாக்கலுக்கு $30 பில்லியன் நிதி கோரிக்கையும்

விமான முடக்கம் அறிவிக்கப்பட்ட நேரத்தில் வானில் பறந்து கொண்டிருந்த 3,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதாக உள்நாட்டு பாதுகாப்புச் செயலர் மார்க்வெய்ன் முல்லின் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், இந்தத் தடைக்கும் சைபர் தாக்குதலுக்கோ அல்லது FAA-ன் புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைப்புக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

பழமையான விமானக் கட்டுப்பாட்டு அமைப்பை முழுமையாக நவீனமயமாக்க ஏற்கனவே ஒதுக்கப்பட்ட $12.5 பில்லியனுடன் கூடுதலாக $30 பில்லியன் நிதியை வழங்குமாறு நாடாளுமன்றத்தை டிரம்ப் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT