பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளருக்கு நெருக்கடி: வெள்ளை மாளிகை கண்டனம்
அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றிருந்த போது, பிரதமர் மோடியிடம் முஸ்லீம்கள் குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை இணையவாசிகள் அதிகமாக ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில், வெள்ளை மாளிகை இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வால் ஸ்ட்ரீட் பத்திரிகையின் செய்தியாளர் சப்ரினா சித்திக், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பிரதமர் மோடியும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தபோது, "இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்த அரசாங்கம் என்ன செய்துள்ளது?" என்று பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, "சாதி, மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதற்கு இந்தியாவில் முற்றிலும் இடமில்லை" என்று கூறினார்.
"இது ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது": வெள்ளை மாளிகை
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்திப்பில் பேசிய பத்திரிகையாளர் கெல்லி ஓ'டோனல், "சப்ரினா சித்திக்கை இந்தியவை சேர்ந்த மக்கள் ஆன்லைனில் துன்புறுத்தி வருகின்றனர். அதில் சில அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்" என்று கூறினார். மேலும், இதற்கு வெள்ளை மாளிகை என்ன பதிலளிக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதிலளித்த தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தகவல்தொடர்புகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி, "அந்தத் துன்புறுத்தல் பற்றிய தகவல்களை நாங்களும் கேள்விப்பட்டோம். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்தச் சூழ்நிலையிலும் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்படுவது கண்டிக்கத்தக்கது. மேலும், இது கடந்த வார அரசு முறை பயணத்தின் போது காட்சிப்படுத்தப்பட்ட ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது" என்று தெரிவித்துள்ளார்.