இந்தியாவில் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுகிறார்களா: சர்ச்சையான கேள்விக்கு பதிலளித்தார் பிரதமர் மோடி
அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி, இந்தியாவில் சிறுபான்மையினருக்கான உரிமைகள் என்ன நிலையில் உள்ளது என்று அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளார். மத சிறுபான்மையினர்கள் இந்தியாவில் ஒடுக்கப்படுவதாக சமீபத்தில் ஒரு பெரும் சர்ச்சை அமெரிக்காவில் கிளம்பியது. இந்த பெரும் குற்றச்சாட்டை முன்வைத்த இல்ஹான் ஓமர், ரஷிதா த்லைப் மற்றும் அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ-கோர்டெஸ் ஆகிய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் பிரதமர் மோடியின் உரையை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர். மேலும், முன்னாள் அமெரிக்க அதிபரான பராக் ஒபாமாவும் இது குறித்து கருத்து தெரிவித்திருந்தார். முஸ்லிம் சிறுபான்மையினரை மதிக்காவிட்டால் இந்தியா சிதறிவிடும் அபாயம் இருக்கிறது என்று அவர் CNNக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.
"ஜனநாயகத்தில் பாகுபாடு கிடையாது": பிரதமர் மோடி
"அமெரிக்க அதிபர், பிரதமர் மோடியை சந்தித்தால், இந்துக்கள் அதிகம் வாழும் இந்தியாவில் முஸ்லிம்களின் பாதுகாப்பு குறித்து பேச வேண்டும்" என்று அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதிபர் ஜோ பைடனுடனான இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடியிடம், அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் இது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, "மனித விழுமியங்களும் மனித உரிமைகளும் இல்லாவிட்டால் ஜனநாயகம் இல்லை... ஜனநாயகமாக வாழும்போது பாரபட்சம் என்ற கேள்விக்கே இடமில்லை. எனது அரசாங்கத்தால் மக்களுக்கு நன்மையை வழங்க முடியும். அப்படி நாங்கள் வழங்கும்போது, சாதி, மத பாகுபாடு இருக்காது. சாதி, மதம், வயது போன்ற பாகுபாடு எதுவும் இல்லாமல் அனைவருக்கும் இந்தியாவில் வசதிகள் உள்ளன." என்று தெரிவித்திருக்கிறார்.