உக்ரைனுக்கு உதவி தேவை: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய உக்ரைன் அதிபர்
கூடுதல் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று உக்ரைன் இந்தியாவிடம் கோரியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் இன்று(ஏப் 12) தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எழுதிய கடிதத்தில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மூன்று நாள் பயணமாக இந்தியா வந்திருந்த உக்ரைனின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் எமினே த்சபரோவா இந்த கடிதத்தை வழங்கியுள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனிய போரில் சேதமடைந்த உள்கட்டமைப்பை மீண்டும் உருவாக்குவது இந்திய நிறுவனங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று உக்ரைனிய இணை அமைச்சர் முன்மொழிந்துள்ளார்.
உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும்: இந்தியா
பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு இருதரப்பு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்ததோடு, அதிபர் ஜெலென்ஸ்கியின் கடிதத்தையும் பிரதமர் மோடியிடம் அவர் வழங்கினார். மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உட்பட கூடுதல் மனிதாபிமான உதவி செய்ய வேண்டும் என்று உக்ரைன் இந்தியாவிடம் கேட்டு கொண்டது. உக்ரைன் மற்றும் இந்தியாவுக்கு இடையேயான அடுத்த பேச்சுவார்த்தை இந்தியாவில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கான தேதியை இரு அரசுகளும் பேசி முடிவு செய்யும். இணை அமைச்சர்கள் இருவரும் பரஸ்பர ஆர்வமுள்ள இருதரப்பு மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். உக்ரைனுக்கு மேம்பட்ட மனிதாபிமான உதவிகளை வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது.