'மனிதர்களுக்கு பதிலாக இனி ரோபோக்கள் தான் போர் செய்யும்!' ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனின் ஆர்மி ஆஃப் ரோபோட்ஸ் திட்டம்
செய்தி முன்னோட்டம்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் ஐந்தாவது ஆண்டாக தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில், உக்ரைன் தனது ராணுவத்தில் மிகப்பெரிய தொழில்நுட்பப் புரட்சியாக ஆர்மி ஆஃப் ரோபோட்ஸ் (Army of Robots) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. உக்ரைனின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மைக்கைலோ ஃபெடோரோவ் இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஆர்மி ஆஃப் ரோபோட்ஸ்
ஆர்மி ஆஃப் ரோபோட்ஸ் அமைப்பின் நோக்கம்
2022-ல் தொடங்கப்பட்ட ஆர்மி ஆஃப் ட்ரோன்ஸ் (Army of Drones) திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இப்புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது ஒரே ஒரு நிறுவனத்தால் உருவாக்கப்படும் சாதனம் அல்ல, மாறாக பல பாதுகாப்புத் தொழில்நுட்ப நிறுவனங்கள், பொறியாளர்கள் மற்றும் ராணுவத்தை உள்ளடக்கிய ஒரு ஈக்கோசிஸ்டமாகும்.
போர்க்களத்தில் முன்னணி வீரர்களின் உயிரிழப்புகளைத் தடுப்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
ரோபோக்கள்
ரோபோக்கள் மேற்கொள்ளும் ஆபத்தான போர்க்களப் பணிகள்
காயமடைந்த வீரர்களை பாதுகாப்பாக மீட்பது, போர்க்களத்திற்கு தேவையான ஆயுதங்களை விநியோகிப்பது, எதிரிகளின் கண்ணிவெடிகளைக் கண்டறிந்து அகற்றுவது, எல்லை நிலைகளை பாதுகாப்பது மற்றும் எதிரிகளின் இலக்குகளைத் தாக்குவது போன்ற மிகவும் ஆபத்தான பணிகளை இந்த தானியங்கி ரோபோக்கள் மேற்கொள்ளவுள்ளன.
இதற்காக புதிய ஆராய்ச்சிப் பணிகளுக்கும், சோதனை முயற்சிகளுக்கும் உக்ரைன் அரசு பெருமளவில் முதலீடு செய்து வருகிறது.
தற்கொலை ரோபோக்கள்
தரைவழி தற்கொலை ரோபோக்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்
உக்ரைனின் மூன்றாவது ராணுவ படைப்பிரிவின் தளபதி ஆண்ட்ரி பிலெட்ஸ்கி கூறுகையில், வான்வழி ட்ரோன்கள் மூலம் தரைவழி ரோபோக்களை எதிரிகளின் எல்லைக்கு பின்னால் இறக்கி தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.
வெடிபொருட்கள் பொருத்தப்பட்ட சக்கரங்களைக் கொண்ட சிறிய தரைவழி ரோபோக்கள் (Suicide Ground Robots), தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்பட்டு எதிரிகளின் இலக்குகள் மீது மோதி வெடிக்க செய்யப்படுகின்றன.
போர்க்களத்தில் ரோபோக்களின் பயன்பாடு ராணுவ வியூகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.