மைக்ரோஃசாப்ட் - ஆக்டிவிஷன் பிலிசார்டு ஒப்பந்தத்தை தடை செய்தது பிரிட்டன்!
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க வீடியோ கேம் நிறுவனமான ஆக்டிவிஷன் பிலிசார்டு நிறுவனத்தை 69 பில்லியன் டாலர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் கையகப்படுத்தவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு கேமிங் சந்தையில் மிகஅதிக மதிப்பு கொண்ட ஒப்பதமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆக்டிவிஷன் பிலிசார்டை கையகப்படுத்துவதை தடை செய்திருக்கிறது பிரிட்டனின் Competition and Market Authority (CMA). ஆக்டிவிஷன் பிலிசார்டு நிறுவனம் தான் 'கால் ஆஃப் ட்யூட்டி', 'ஓவர்வாட்ச்', 'வேர்ல்டு ஆஃப் வார்கிராஃப்ட்' ஆகிய வீடியோ கேம்களை வெளியிட்டிருந்தது. இந்த ஒப்பந்தம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு சந்தையில் கூடுதலான அதிகாரத்தையும், கிளவுடு கேமிங் சந்தையில் போட்டியில்லாத நிலையையும் உருவாக்கும். எனவே தான் இந்த ஒப்பந்தத்தை தடை செய்வதாகத் தெரிவித்திருக்கிறது CMA.
மைக்ரோஃசாப்ட் சொல்வது என்ன?
ஆக்டிவிஷன் பிலிசார்டு நிறுவனத்தை கையகப்படுத்துதன் மூலம் 'கால் ஆஃப் ட்யூட்டி' உள்ளிட்ட கிளவுடு கேம்கள் மைக்ரோஃசாப்டின் கீழ் வரும். இது அந்நிறுவனத்தின் கன்சோல் மற்றும் கிளவுடு கேமிங்கிற்கும் லாபகரமானதாக இருக்கும். CMA-வின் இந்த முடிவு குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பிராடு ஸ்மித், "ஆக்டிவிஷன் பிலிசார்டு நிறுவனத்தின் கேம்களை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டன். CMA-வின் இந்த முடிவு பிரிட்டனில் தொழில்நுட்ப முன்னெடுப்புகள் மற்றும் முதலீடுகளை செய்ய நினைக்கும் நிறுவனங்களுக்கு மோசமான செய்தியைக் கொண்டு சேர்க்கும்." எனத் தெரிவித்துள்ளார். இந்த முடிவை மாற்றுவதற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து முயற்சி செய்வோம் என தெரிவித்திருக்கிறது ஆக்டிவிஷன் பிலிசார்டு நிறுவனம்.