துருக்கி நிலநடுக்கம் அப்டேட்ஸ்: ஆபரேஷன் தோஸ்த் என்றால் என்ன
திங்கட்கிழமை(பிப் 6) ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தால் சிரியா மற்றும் துருக்கியில் 21,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் 17,674 பேரும், சிரியாவில் 3,377 பேரும் உயிரிழந்துள்ளனர். எனவே, உறுதிப்படுத்தப்பட்ட மொத்த எண்ணிக்கை 21,051ஆகக் அதிகரித்துள்ளது. இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களைக் காப்பாற்ற நான்காவது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏழு நகரங்களில் பொது மருத்துவமனைகள் உட்பட கிட்டத்தட்ட 3,000 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக துருக்கி அரசாங்கம் கூறியுள்ளது. ஹடேயில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிய 2 வயது சிறுவனை 79 மணி நேரத்திற்குப் பிறகு மீட்டது, சோர்வடைந்த மீட்பு குழுவினரிடையே உற்சாகத்தை எழுப்பி உள்ளது. நிலநடுக்கத்திற்குப் பிறகு துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவ, இந்தியா "ஆபரேஷன் தோஸ்த்" என்பதை தொடங்கியுள்ளது.
ஆபரேஷன் தோஸ்த் என்றால் என்ன?
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்புவதற்கு, 'ஆபரேஷன் தோஸ்த்' என்பதை இந்தியா தொடங்கியுள்ளது. "தோஸ்த்"(நண்பன்) என்ற வார்த்தை ஹிந்தி மற்றும் துருக்கிய மொழிகளில் ஒரே மாதிரியான அர்த்தத்தை கொடுப்பதால் இந்த திட்டத்திற்கு இப்படி ஒரு பெயர் வைத்திருக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. "எங்களிடம் ஒரு துருக்கிய பழமொழி உள்ளது: 'தோஸ்த் காரா குண்டே பெல்லி ஒளூர்' (ஆபத்தில் உதவுகிறவனே உற்ற நண்பன்)" என்று இந்தியாவுக்கான துருக்கி தூதர் ஃபிரத் சுனெல் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும் அவர், "மிக்க நன்றி, இந்தியா" என்றும் தன் நன்றிகளை தெரிவித்திருந்தார். நிவாரணப் பொருட்கள் மற்றும் மீட்புப் பணியாளர்களுடன் இந்தியாவிலிருந்து ஆறாவது விமானம் நேற்று(பிப் 9) துருக்கியை சென்றடைந்ததாக வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார்.