துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 16 ஆயிரத்தைத் தாண்டிய உயிரிழப்புகள்
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,035ஐ எட்டியுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன், கஹ்ரமன்மராஸ் சென்ற போது ஆரம்ப மீட்பு நடவடிக்கைகளில் இருந்த குறைபாடுகளை ஒப்புக்கொண்டார். உறைபனிக்கு இடையில் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருப்பதால் மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். தென்கிழக்கு துருக்கி மற்றும் அண்டை நாடான சிரியாவில் திங்கள்கிழமை(பிப் 6) முதல் ஐந்து பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதல் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டன. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான முதல் நிலநடுக்கத்தால் இடிந்து விழந்த ஆயிரக்கணக்கான கட்டிடங்களில் பலர் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது
மிகபெரும் பூகம்ப மண்டலமான துருக்கி
1939ஆம் ஆண்டு கிழக்கு எர்சின்கான் மாகாணத்தில் 33,000 பேரை கொன்ற நிலநடுக்கத்திற்கு பிறகு இவ்வளவு பெரிய நிலநடுக்கம் துருக்கியில் பாதிவாகி இருப்பது இதுவே முதல்முறை. துருக்கி ஒரு மிகபெரும் பூகம்ப மண்டலத்தில் அமைந்திருப்பதால் அங்கு இப்படிப்பட்ட நில அதிர்வுகள் ஏற்படுவது புதிதல்ல . 2020இல் துருக்கி மற்றொரு பெரிய பூகம்பத்தால் தாக்கப்பட்டது. அந்த பூகம்பம் 6.7 ரிக்டர் அளவில் நாட்டின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டிருந்தது. 1999இல், இஸ்தான்புல் அருகே 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், 18,000 பேர் கொல்லப்பட்டனர். திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் துருக்கியில் 12,873 பேரும், அண்டை நாடான சிரியாவில் குறைந்தது 3,162 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மொத்த எண்ணிக்கை 16,035 ஆக உள்ளது.