சுனாமி எச்சரிக்கையை நீக்கிய பிலிப்பைன்ஸ்; இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் மக்கள்
நேற்று (டிசம்பர் 2) இரவு 10.37 மணியளவில் பிலிப்பைன்ஸின் மிண்டானோவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு, அதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸின் சூரிகாவ் டெல் சூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், தற்போது கடலோரப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிலிப்பைன்ஸின் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிறுவமானது இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. எனினும், இரவு ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சிறிய அளவிலான 500-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் இன்னும் ஏற்பட்ட வண்ணமே இருப்பதாக அப்பகுதிகளில் வாழும் மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள்:
நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் உயிர்ச்சேதங்கள் பெரிய அளவில் இல்லை என்றே தெரிகிறது. ஆனால், அப்பகுதியில் உள்ள பல்வேறு கட்டிடங்களில் சிறிய அளவில் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை முதலே அப்பகுதி மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். எனினும், மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், உடனடித் தகவல்களுக்கு உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். மேலும், மேற்கொண்டு நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டால், உடனடியாக மக்களை வெளியேற்றவும் தயாரான நிலையிலேயே அதிகாரிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.