'அதிபர் தேர்தலில் நான் தோல்வியடைந்தால் அமெரிக்கா ரத்த வெள்ளத்தில் மூழ்கிவிடும்': டொனால்ட் டிரம்ப் பேச்சு
வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தோல்வியடைந்தால் நாட்டில் இரத்தக்களரி ஏற்படும் என முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். செனட் வேட்பாளர் பெர்னி மோரேனோவுக்காக ஓஹாயோ மாநிலத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் போது அவர் இந்த வார்த்தைகளை கூறினார். 2024 அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் போட்டியிட உள்ளனர். சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் தேர்தலில் இருவர் மீண்டும் ஒருவருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுவது இதுவே முதல்முறையாகும்.
அமெரிக்காவின் இருண்ட எதிர்காலம் குறித்து பேசிய டிரம்ப்
2024 அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, குடியரசுக் கட்சியின் பிரச்சாரத்தில் டிரம்ப் ஆதிக்க சக்தியாக உருவெடுத்துள்ளார். இந்நிலையில், நேற்று ஓஹாயோ மாநிலத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் போது பேசிய முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பைடன் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றால் அமெரிக்காவின் எதிர்காலம் எப்படி இருண்டிருக்கும் என்பதை விவரித்தார். "நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், இரத்தக்களரியாக இருக்கும். நாடே இரத்தக்களரியாக இருக்கும்," என்று அவர் தெரிவித்துள்ளார். எதிர்காலத் தேர்தல்கள் குறித்து கவலை தெரிவித்த அவர், "இந்தத் தேர்தலில் நான் வெற்றிபெறவில்லை என்றால், இந்த நாட்டில் இன்னொரு தேர்தல் வருமா என்பதே சந்தேகம் தான்" என்றும் தெரிவித்துள்ளார்.