
சீனா மீது 100% வரை வரி விதிக்க நேட்டோ நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வர, நேட்டோ உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். தனது சமூக ஊடகப் பக்கமான ட்ரூத் சோசியலில் அவர் வெளியிட்ட பதிவில், நேட்டோ நாடுகள் ரஷ்ய எண்ணெயை வாங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், போர் முடியும் வரை சீனா மீது 50% முதல் 100% வரை அதிக வரி விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அவர் நேட்டோ நாடுகள் மற்றும் உலகிற்கான கடிதம் என்ற தலைப்பில் வெளியிட்ட அந்த பதிவில், அனைத்து நேட்டோ நாடுகளும் ஒத்த நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே, அமெரிக்கா ரஷ்யா மீது முக்கியமான தடைகளை விதிக்கும் என்று தெரிவித்தார்.
ரஷ்ய எண்ணெய்
நேட்டோ நாடுகள் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதாக விமர்சனம்
ரஷ்யாவிடம் இருந்து பல நேட்டோ நாடுகள் எண்ணெய் வாங்குவதாகவும், இது ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையில் நேட்டோவின் பலத்தைக் குறைப்பதாகவும் அவர் விமர்சித்தார். சீனாவிற்கு ரஷ்யா மீது அதிக செல்வாக்கு இருப்பதாகவும், சீனாவுக்கு அதிக வரி விதிப்பது, அந்தச் செல்வாக்கைக் குறைக்கும் என்றும் டிரம்ப் வாதிட்டார். இந்த வரிகள் போர் முடிவடையும் வரை தொடர வேண்டும் என்றும், அமைதி திரும்பியதும் முழுமையாக நீக்கப்படலாம் என்றும் அவர் கூறினார். "இது டிரம்பின் போர் அல்ல (நான் அதிபராக இருந்திருந்தால் இந்தப் போர் தொடங்கியிருக்காது!). இது பைடன் மற்றும் ஜெலன்ஸ்கியின் போர்" என்று டிரம்ப் மேலும் குற்றம் சாட்டினார். நேட்டோ தனது பரிந்துரைகளைப் பின்பற்றாவிட்டால், அது அமெரிக்காவின் நேரத்தையும், சக்தியையும் வீணடிப்பதாக அமையும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.