
அமெரிக்காவில் இனி பாதுகாப்புத் துறை கிடையாது? பெயரை போர்த்துறை என மாற்றி டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க ராணுவ பலத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில், அதிபர் டொனால்ட் டிரம்ப், பாதுகாப்புத் துறையின் பெயரை அதிகாரப்பூர்வமாக போர்த் துறை (Department of War) என மாற்றி நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். தற்போதைய உலக சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த பெயர் மிகவும் பொருத்தமானது என்றும், முந்தைய பெயர் பண்பாடு இல்லாதது என்றும் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டார். புதிய பெயர், 1789 ஆம் ஆண்டு முதல் இரண்டாம் உலகப் போர் முடிவடையும் வரை இருந்த போர்த் துறையின் பழைய பெயரை மீண்டும் கொண்டு வந்துள்ளது. 1947 ஆம் ஆண்டு, அப்போதைய அதிபர் ஹாரி ட்ரூமன் போர்த் துறையைப் பாதுகாப்புத் துறையாக மாற்றியமைத்தார்.
சட்டம்
சட்ட ரீதியாக பெயர் மாற்றம் செல்லுமா?
மத்தியத் துறைகளின் பெயரை மாற்றும் அதிகாரம் காங்கிரஸிடம் இருந்தாலும், டிரம்பின் சில ஆதரவாளர்கள் இந்த மாற்றத்தை சட்டப்பூர்வமாக்க முயற்சி செய்து வருகின்றனர். இதற்கிடையில், இந்த புதிய பெயரைப் பயன்படுத்த பென்டகனுக்கு டிரம்ப் அங்கீகாரம் அளித்துள்ளார். டிரம்புடன் பேசிய பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத், பெயர் மாற்றப்பட்டதிலிருந்து நாம் எந்த முக்கியப் போரிலும் வெற்றி பெறவில்லை என்று கூறி, பாதுகாப்பிலிருந்து தாக்குதல் முறைக்கு மாறுவதே இதன் நோக்கம் என்று விளக்கினார். டிரம்ப் நிர்வாகம், ராணுவத்தில் உள்ள பண்பாடு இல்லாத கொள்கைகளை மாற்றுவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்தப் பெயர் மாற்றத்தைப் பார்க்கிறது.