இந்தியாவின் குறைந்த வட்டி விகிதங்கள், 7% ஜிடிபி வளர்ச்சியை பாராட்டிய டிரம்ப்; அமெரிக்காவாலும் முடியும் என பேச்சு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் பொருளாதார செயல்பாடுகளை வெகுவாகப் பாராட்டியுள்ளார். வெள்ளை மாளிகையில் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோர் உடனிருக்க அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியாவின் குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் ஏழு சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை (ஜிடிபி) அவர் சுட்டிக்காட்டினார். அமெரிக்காவும் இதே அணுகுமுறையை பின்பற்றினால் 14 முதல் 20 சதவீதம் வரை பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்ய முடியும் என டிரம்ப் தெரிவித்தார்.
குறைந்த வட்டி விகிதம்
உலகிலேயே மிகக் குறைந்த வட்டி விகிதம் அமெரிக்காவில் இருக்க வேண்டும் என டிரம்ப் வாதம்
பிற நாடுகளின் பொருளாதார வெற்றிக்கு அமெரிக்காவே முக்கியப் பங்காற்றுவதால் உலகிலேயே மிகக் குறைந்த வட்டி விகிதம் அமெரிக்காவில் இருக்க வேண்டும் என டிரம்ப் வாதிட்டார்.
பொருளாதாரம் சிறப்பாக இல்லாத காலங்களிலும் கூட அமெரிக்கா குறைந்த வட்டி விகிதங்களைக் கொண்டிருந்தது என அவர் நினைவுகூர்ந்தார்.
ஆனால் தற்போது வலுவான பொருளாதார புள்ளிவிவரங்கள் பதிவாகும் நிலையில் கடன் செலவுகள் தொடர்ந்து உயர்த்தப்படுவது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார்.
இந்தியாவைப் போல சாதகமான கடன் சூழலை உருவாக்கினால் அமெரிக்கப் பொருளாதாரம் புதிய உச்சத்தைத் தொடும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பெடரல் ரிசர்வ் கொள்கை
பெடரல் ரிசர்வ் கொள்கை மீது விமர்சனமும் ஆலன் கிரீன்ஸ்பான் அணுகுமுறையும்
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் மிகவும் அரசியல்மயமாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய டிரம்ப், வட்டி விகித உயர்வு நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பதாகக் கூறினார்.
முன்னாள் பெடரல் ரிசர்வ் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பான் பொருளாதாரம் சிறப்பாக செயல்படும்போது வட்டி விகிதங்களைக் குறைப்பார் என அவர் சுட்டிக்காட்டினார்.
நல்ல புள்ளிவிவரங்கள் வரும்போது கடன் தகுதி மேம்படுவதால் குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வேண்டும் என்பதே சரியான பொருளாதார விதி என்றார்.
வட்டி விகிதத்தில் ஒவ்வொரு சதவீதமும் 650 பில்லியன் டாலர் மதிப்புடையது என்பதால் வட்டியைக் குறைத்தால் தேசியக் கடனை விரைவாக அடைக்க முடியும் எனத் தெரிவித்தார்.
குறைந்த வறுமை விகிதம்
குறைந்த வறுமை விகிதமும் வரி கொள்கைகளால் தொழிற்சாலைகள் வளர்ச்சியும்
அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு அதிகமான அமெரிக்கர்கள் தற்போது பணியாற்றி வருவதாகவும் வறுமை விகிதம் வரலாற்றுக் குறைந்த அளவை எட்டியுள்ளதாகவும் டிரம்ப் கூறினார்.
தனது இறக்குமதி வரி கொள்கைகளால் ஆடி மற்றும் டொயோட்டா போன்ற முன்னணி நிறுவனங்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் அமெரிக்காவில் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மத்திய வங்கியின் வட்டி விகிதக் கொள்கைகள் மற்றும் விமர்சனங்களைத் தாண்டி அமெரிக்கப் பொருளாதாரம் தொடர்ந்து வலுவாக வளர்ந்து வருகிறது என்றார்.
எதிர்வரும் காலங்களில் அமெரிக்கப் பொருளாதாரம் யாரும் நம்ப முடியாத அளவிற்குப் பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்றும் டிரம்ப் உறுதியளித்தார்.