டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற உடன் அமெரிக்க ராணுவத்தில் மீண்டும் திருநங்கைகளுக்கு தடை விதிக்கப்படும் என தகவல்
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், திருநங்கைகள் ராணுவத்தில் பணியாற்றுவதைத் தடை செய்வதற்கான நிர்வாக உத்தரவைத் தயாரித்து வருவதாக தி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது தற்போது சேவையில் உள்ள சுமார் 15,000 திருநங்கைகளை ராணுவ சேவையிலிருந்து வெளியேற்றும். அவர்களை மருத்துவ ரீதியாக தகுதியற்றவர்கள் என்று முத்திரை குத்தி, எதிர்காலத்தில் திருநங்கையர் சேர்க்கையை தடை செய்யும். இந்தக் கொள்கையானது டிரம்பின் 2019 ஆம் ஆண்டு தடையை எதிரொலிக்கிறது. இது மிகப்பெரிய மருத்துவ செலவுகள் மற்றும் இடையூறுகளை மேற்கோள் காட்டி அப்போது மேற்கொள்ளப்பட்டது. எனினும், அந்தத் தடையானது பின்னர் ஜனாதிபதி ஜோ பிடனால் பதவியேற்றவுடன் மாற்றப்பட்டது. இந்நிலையில், டிரம்பின் கொள்கையை மீண்டும் நிலைநிறுத்துவது திருநங்கைகளுக்கான சிவில் உரிமைகளில் குறிப்பிடத்தக்க பின்னடைவைக் குறிக்கும்.
வோக்ஸ் கலாச்சாரத்தை எதிர்க்கும் டொனால்ட் டிரம்ப்
78 வயதான டிரம்ப், ராணுவத்தில் வோக்ஸ் கலாச்சார நடைமுறைகளை விமர்சித்துள்ளார். பன்முகத்தன்மை முயற்சிகள் ராணுவத்தின் செயல்பாட்டுத் தயார்நிலையிலிருந்து விலகுவதாக வலியுறுத்தினார். ஏறக்குறைய அனைத்து கிளைகளிலும் ஆட்சேர்ப்பு இலக்குகளை அடைய அமெரிக்க ஆயுதப் படைகள் போராடும் நிலையில் இந்த உத்தரவு வந்துள்ளது. ராணுவக் கொள்கைகளுக்கு மேலதிகமாக, டிரம்பின் பிரச்சார வாக்குறுதிகளில் LGBTQ+ சமூகத்தை இலக்காகக் கொண்ட விரிவான நடவடிக்கைகளும் அடங்கும். அதாவது பாலினத்தை உறுதிப்படுத்தும் சுகாதாரப் பாதுகாப்பை திருநங்கைகள் அணுகுவதைத் தடை செய்தல் மற்றும் திருநங்கை மாணவர்கள் விளையாட்டில் பங்கேற்பதைத் தடுப்பது அல்லது அவர்களின் பாலின அடையாளத்துடன் இணைந்த குளியலறைகளைப் பயன்படுத்துவது போன்றவையும் அடங்கும். எனினும், அவரது கொள்கைகளின் சர்ச்சைக்குரிய தன்மையை பிரதிபலிக்கும் வகையில், இதற்கு எதிராக சட்டரீதியான சவால்களும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.