திடீரென கனடா, மெக்சிகோ மீதான வரிகளை டிரம்ப் ஒத்திவைப்பு; இதுதான் காரணம்?
செய்தி முன்னோட்டம்
கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகளை அமல்படுத்துவதை அமெரிக்கா குறைந்தது 30 நாட்களுக்கு ஒத்திவைக்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திங்களன்று அறிவித்தார்.
இரண்டு முக்கிய வர்த்தக அண்டை நாடுகள் மீது அமெரிக்கா 25 சதவீத வரிகளை விதிப்பதாக அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு வர்த்தக அச்சுறுத்தலை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் மேற்கொண்ட இரண்டு தொலைபேசி அழைப்புகளை தொடர்ந்தும், மெக்சிகன் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் பார்டோவுடன் பேசிய பின்னரும் வரிகளை இடைநிறுத்த முடிவு செய்தார்.
இருப்பினும், சீனா மீதான 10 சதவீத வரி செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வர உள்ளது.
வரி
எதற்காக டிரம்ப் வரி விதித்தார்?
சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தேசிய பாதுகாப்பு கவலைகளை மேற்கோள் காட்டி, கனடா, மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு 25 சதவீதமும், சீனாவின் மீது 10 சதவீதமும் வரி விதிக்க டிரம்ப் சனிக்கிழமை உத்தரவிட்டார்.
இந்த நடவடிக்கை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரவிருந்தது. பதிலடியாக கனடாவும், மெக்சிகோவும் எதிர் வரிகளை அறிவித்தன.
இடைநிறுத்தல்
வரி விதிப்பை இடை நிறுத்தியதற்கான காரணம் என்ன?
அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் எழுப்பிய எல்லைக் கவலைகள் குறித்து கனடா கூடுதல் ஒத்துழைப்பை தருவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்தும், எல்லைப் பாதுகாப்பு முயற்சிகளை அதிகரிக்க ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்தும், அமெரிக்க ஜனாதிபதி குறைந்தது 30 நாட்களுக்கு கட்டணங்களை இடைநிறுத்த ஒப்புக்கொண்டதாக கனேடிய பிரதமர் ஒரு டீவீட்டில் கூறினார்.
ட்ரூடோவின் அறிவிப்புக்குப் பிறகு, அதிபர் டிரம்ப்பும் இந்த முன்னேற்றத்தை உறுதிப்படுத்தினார்.
அதேபோல அமெரிக்காவிற்குள் சட்டவிரோத போதைப்பொருட்களின் ஓட்டத்தைத் தடுக்க, மெக்சிகோ உடனடியாக 10,000 தேசிய காவல்படை வீரர்களை அதன் வடக்கு எல்லையில் நிறுத்தும் என்று மெக்ஸிகோ அதிபரும் உத்தரவாதம் அளித்ததாக கூறப்படுகிறது.