'நாஜி' வீரரை ட்ரூடோ கௌரவித்ததால் பரபரப்பு: யூதர்களிடம் மன்னிப்பு கோரினார் நாடாளுமன்ற சபாநாயகர்
கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நாஜி பிரிவைச் சேர்ந்த ஒரு வீரரைச் சந்தித்துக் கௌரவித்ததற்காக அவருக்கு எதிரான விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், கனட மக்களவையின் சபாநாயகர் அந்தோனி ரோட்டா இதற்காக ஞாயிற்றுக்கிழமை யூத சமூகத்திடம் மன்னிப்பு கேட்டார். கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லிவேர் ட்ரூடோவின் "தீர்ப்பில் இருந்த பயங்கரமான பிழையை" சுட்டிக்காட்டியதை அடுத்து மன்னிப்பு கோரப்பட்டது. இந்த வாரம் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கனடா வந்திருந்த போது, நாஜி குழுவான SSஇன் 14வது வாஃபென் கிரெனேடியர் பிரிவின் மூத்த வீரரை ட்ரூடோ சந்தித்து கௌரவித்தார். இதை கடுமையாக எதிர்த்த எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லிவேர், ட்ரூடோ இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரினார்.
மன்னிப்பு கோரினார் சபாநாயகர் அந்தோணி ரோட்டா
கனடாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைக் குழுவான பிரண்ட்ஸ் ஆப் சைமன் வைசெந்தல் மையமும்(FSWC) இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தது. "இரண்டாம் உலகப் போரில் யூதர்கள் மற்றும் பிறரைக் கொன்று குவித்த, நாஜி இராணுவப் பிரிவில் பணியாற்றிய உக்ரேனியப் படைவீரருக்குக் கனடாவின் நாடாளுமன்றம் கைத்தட்டல் வழங்கியுள்ளது." என்று FSWC அமைப்பு ட்விட்டரில் விமர்த்திருந்தது. இது தவிர, பல முக்கிய அமைப்புகளிடம் இருந்தும் முக்கிய பிரமுகர்களிடம் இருந்தும் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த மக்களவை சபாநாயகர் அந்தோணி ரோட்டா கனடா மற்றும் உலகம் முழுவதும் உள்ள யூத சமூகத்திடம் மன்னிப்பு கேட்டார். மேலும், அவர் இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பையும் ஏற்றுள்ளார்.