ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த பகீர் சம்பவம்; இரண்டு பேர் பலி; 68 பேர் காயம்
ஜெர்மனியின் மேக்டிபார்கில் உள்ள ஒரு கிறிஸ்துமஸ் சந்தை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) மாலை பேரழிவின் காட்சியாக மாறியது. ஒரு கார் வேண்டுமென்றே கூட்டத்திற்குள் நுழைந்ததில் ஒரு குழந்தை உட்பட இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 68 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில், 15 பேர் கடுமையான காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். 37 பேர் மிதமான காயங்களுக்கு ஆளாகியுள்ளனர் மற்றும் 16 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 100 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 50 மீட்புப் பணியாளர்கள் உட்பட அவசரகால பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கவும், மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லவும் விரைந்து வந்தனர்.
சந்தேக நபர் கைது
2006 ஆம் ஆண்டு முதல் ஜெர்மனியில் வசிக்கும் 50 வயதான சவுதி அரேபிய மருத்துவர் இந்த விவகாரத்தில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அவர் தனியாக செயல்பட்டதாக நம்பப்படுகிறது. இரவு 7 மணியளவில் நடந்த இந்த சம்பவம், நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜெர்மன் உள்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் வருத்தம் தெரிவித்தார். இந்த சம்பவத்தை ஆழ்ந்த அதிர்ச்சிச்சிக்குரியது என்று விவரித்தார். இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள நோக்கத்தை புலனாய்வாளர்கள் ஆராய்ந்துவரும் நிலையில், இந்த சோகம் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகத்தின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சமூகத்தை அதிர்ச்சியிலும் துக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது. பிராந்தியம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.