'இந்தியாவுடனான உறவுகள் நிலையாக உள்ளது': சீனா
புது டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்ள மாட்டார் என்று நேற்று சீனா அறிவித்திருந்த நிலையில், ஜி20 மாநாட்டிற்கு இந்த வருடம் தலைமை தாங்கும் இந்தியாவிற்கு சீன வெளியுறவு அமைச்சகம் ஆதரவு தெரிவித்துள்ளது. உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஜி20 நிகழ்வை நடத்தும் இந்தியாவை ஆதரிப்பதாகவும், அதை வெற்றிகரமாக நடத்தி முடிக்க அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் ஜி20 உச்சிமாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்க்கு பதிலாக சீனாவின் பிரீமியர் லீ கியாங் கலந்துகொள்வார் என்று சீனா நேற்று அறிவித்தது.
அருணாச்சல பிரதேசத்தை தனது நாட்டின் ஒரு பகுதியாக பிரித்த சீனா
இந்நிலையில், அதிபருக்கு பதிலாக பிரீமியரை இந்தியாவுக்கு அனுப்பும் முடிவு இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டத்தை பிரதிபலிக்கிறதா என்று சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்கிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மாவோ நிங், இந்தியாவுடனான உறவுகள் நிலையாக உள்ளது என்றும் இரு நாடுகளும் பல்வேறு நிலைகளில் தங்களது உறவுகளை பேணி வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் சீனாவால் வெளியிடப்பட்ட புதிய வரைபடத்தினால் இந்தியாவில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரைபடத்தில் அருணாச்சல பிரதேசத்தை தனது நாட்டின் ஒரு பகுதியாக சீனா பிரிந்திருந்தது. இது நடந்து ஒரு வாரமே ஆகியிருக்கும் நிலையில், தற்போது சீனா, இரு நாட்டு உறவுகளும் நிலையாக இருப்பதாக கூறியுள்ளது.