இஸ்ரேல் பிரதமர் போர் நிறுத்தத்திற்கு தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு: இஸ்ரேலில் பெரும் போராட்டம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் நிறுத்தத்திற்கு தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து, காசாவில் பொங்கி எழும் போரைக் கையாளும் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்யக் கோரி இஸ்ரேலின் இரண்டு நகரங்களான டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமின் தெருக்களில் லட்சக்கணக்கான எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கெய்ரோவில் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில் சனிக்கிழமை மாலை எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன. குறைந்தது 134 இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினர் காசாவில் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர். டெல் அவிவ் நகரில், பணயக்கைதிகள் சிலரின் உறவினர்களை உள்ளடக்கிய போராட்டக்காரர்கள், நகரின் ரிங் ரோட்டை மறித்து போராட்டம் நடத்தினர்.
பிரதமர் நெதன்யாகு பணயக்கைதிகளை விடுவிக்க தவறிவிட்டதாக குற்றச்சாட்டு
எதிர்ப்பாளர்கள் ஒழுங்கை மீறி கப்லான் தெருவில் முக்கிய சாலைகளைத் தடுக்க முயன்றனர். இந்நிலையில், சனிக்கிழமை பாதுகாப்புப் பணியாளர்கள் "பொது ஒழுங்கைப் பேண வேலை செய்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளனர். மேலும், போராட்டக்காரர்கள் அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டதாகவும், பொது ஒழுங்கை மீறியதாகவும், பொது சொத்துக்களை தீ வைத்து கொளுத்தியதாகவும், சாலைகளை மறித்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, டெல் அவிவில் போராட்டம் முடிவுக்கு வந்ததாக காவல்துறை அறிவித்தது. அதே நேரத்தில் 16 எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில், ஜெருசலேமில், நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் பிரதமர் நெதன்யாகுவின் இல்லத்திற்கு வெளியே கூடி, பணயக்கைதிகளை விடுவிக்க அவரது தீவிர வலதுசாரி அரசாங்கம் தவறிவிட்டதாக குற்றம் சாட்டினர்.