காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்-ஆயிரக்கணக்கான மக்கள் தெற்கு நோக்கி வெளியேறினர்
இஸ்ரேல் படைகள் மற்றும் ஹமாஸ் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், காசா நகரின் இதய பகுதிக்குள் நுழைந்து விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். அதே சமயம் சுற்றி வளைக்கப்பட்ட காசா பகுதியில், நகரின் முக்கிய அல் ஷிஃபா மருத்துவமனையில் உள்ளவர்கள் கூட ஆயிரக்கணக்கானோர் இன்னும் உள்ளனர். ஹமாஸ் அமைப்பின் உட்கட்டமைப்புகள் மற்றும் சுரங்கங்களை தகர்த்ததாக, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ட்விட்டரில் வீடியோவை பகிர்ந்திருந்தனர். அதேபோல் ஹமாஸ் அமைப்பும், கட்டிட இடிபாடுகளுக்கு நடுவே இஸ்ரேல் படைகளுக்கு எதிராக சண்டையிடும் காட்சிகளை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
போர் இடைநிறுத்தத்திற்கு இஸ்ரேல் மறுப்பு
காசா பகுதிக்கு நிவாரண பொருட்கள் சென்றடையவும், காயமடைந்தவர்களை மீட்கவும், மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலிடம் போரில் இடைநிறுத்தம் செய்யக்கோரி வலியுறுத்தி வருகின்றனர். நேற்று, ஜி 7 நாடுகளும் போர் இடைநிறுத்தத்திற்கு வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பணைய கைதிகளை ஹமாஸ் முழுவதுமாக விடுதலை செய்யும் வரை, போரில் இடைநிறுத்தம் செய்வதற்கு சாத்தியம் இல்லை என இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய போரில், இஸ்ரேல் தரப்பில் 1,400 நபர்களும், பாலஸ்தீன் தரப்பில் 4,300 குழந்தைகள் உட்பட 10,500 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். முதியவர்கள், குழந்தைகள் மற்றும் வெளிநாட்டினர் உட்பட 239 நபர்களை பணைய கைதிகளாக ஹமாஸ் பிடித்து வைத்துள்ளது.
சிரியாவில் ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா தாக்குதல்
கடந்த மாதம் சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்க படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, அமெரிக்கா பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. அக்டோபர் 17, 18 ஆகிய தேதிகளில் சிரியா மற்றும் ஈராக்கில் முகாமிட்டிருந்த அமெரிக்கப் படைகள் மீது, ஈரான் ஆதரவு படைகள் நடத்திய தாக்குதலில் 45 வீரர்கள் காயமடைந்தனர். இரண்டு யு.எஸ். எஃப்-15 போர் விமானங்கள் ஈரானின் புரட்சிகரக் காவலர் படை பயன்படுத்தியதாக அறியப்பட்ட டெய்ர் எல்-ஸூரில் உள்ள மேசுலுன் அருகே உள்ள ஆயுதக் கிடங்கின் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி, இதே போன்ற தாக்குதல்களை ஈரான் ஆதரவு படைகள் மீது, அமெரிக்கா நடத்தியது குறிப்பிடத்தக்கது.