முற்றும் மோதல்; கனடா விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய இலங்கை
செய்தி முன்னோட்டம்
காலிஸ்தானி தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே நிலவும் மோதலுக்கு மத்தியில், இலங்கை இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது.
இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, இந்த விவகாரம் குறித்து கூறுகையில், பயங்கரவாதிகளின் புகலிடமாக கனடா மாறியுள்ளது என்றார்.
மேலும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் மூர்க்கத்தனமானவை என்றும், ஆதாரம் இல்லாதவை என்றும் கூறினார்.
இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக கனடா கூறியபோதும், இதேபோல் பொய்தான் பேசினார் என்று கூறிய அவர், ட்ரூடோவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டு தன்னை ஆச்சரியப்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
Srilanka support India in Canada issue
கனடாவின் விசாரணைக்கு ஒத்துழைக்க இந்தியாவிடம் அமெரிக்கா வலியுறுத்தல்
ட்ரூடோவின் செயல்பாடுகளால் இந்திய-கனடா உறவு கடுமையாக மோசமடைந்துள்ள நிலையில், பல நாடுகளும் இந்த விவகாரத்தில் கனடாவுக்கு ஆதரவாக பேச மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், கனடாவின் அண்டை நாடு மற்றும் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், கனடா விசாரணையைத் தொடர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தங்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், கனடா அரசுடன் இதுகுறித்து தொடர்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், நிஜ்ஜார் கொலை வழக்கில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவதும் மிகவும் முக்கியமானது என்று தாங்கள் நம்புவதாக தெரிவித்த அவர், கனடாவின் விசாரணையில் ஒத்துழைக்க, இந்திய அரசாங்கத்தை பகிரங்கமாகவும் தனிப்பட்ட முறையிலும் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.