'சாரு யாரு..தாராள பிரபு டோய்': டெலிகிராம் CEOக்கு 12 நாடுகளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
பிரபலமான செய்தியிடல் ஆப்-ஆன டெலிகிராமின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ், 12 வெவ்வேறு நாடுகளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரியல் தந்தை என்பதை வெளிப்படுத்தியுள்ளார். டெலிகிராம் பிளாட்ஃபார்மில் அவரது 5.7 மில்லியன் சந்தாதாரர்களுக்கு இது ஆச்சரியமான வெளிப்பாடாக இருந்ததது. "எனக்கு 100 க்கும் மேற்பட்ட உயிரியல் குழந்தைகள் இருப்பதாக என்னிடம் கூறப்பட்டது," என்று துரோவ் ஆச்சரியத்துடன் கூறினார். திருமணமாகாத மற்றும் தனியாக வாழ விரும்பும் ஒருவருக்கு இது எப்படி சாத்தியமாகும் என்றும் கேள்வி எழுப்பினார்.
துரோவின் விந்தணு தான பயணம் 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது
துரோவின் விந்தணு தான பயணம் 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஒரு நண்பர், அவரது மனைவியுடன் கருவுறுதல் பிரச்சினைகளை எதிர்கொண்ட போது, ஒரு கிளினிக்கில் விந்தணு தானம் செய்யும்படி அவரைக் கோரினார். அப்போது துவங்கியது இந்த 'தாராள பிரபு' பட பாணி பயணம். இந்த கோரிக்கையால் ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்த துரோவ் இறுதியில் உதவ ஒப்புக்கொண்டார். கிளினிக்கின் தலைவர் அவருக்கு "உயர்தர நன்கொடையாளர்" பற்றாக்குறை பற்றி தெரிவித்ததோடு, "அதிக விந்தணுக்களை அநாமதேயமாக அதிக தம்பதிகளுக்கு தானமாக வழங்குவது அவரது குடிமைக் கடமை" என்று பரிந்துரைத்தார். இந்த யோசனையால் ஈர்க்கப்பட்ட துரோவ், தொடர்ச்சியாக விந்து தானம் செய்ய முடிவு செய்தார்.
IVF கிளினிக்குகளில் இன்னும் துரோவின் விந்தணு உள்ளது
துரோவின் விந்தணு தானம் 12 நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறப்பதற்கு வழிவகுத்தது. நன்கொடை அளிப்பதை நிறுத்திய பிறகும், குறைந்தபட்சம் ஒரு IVF கிளினிக்கில், குழந்தைகளைப் பெற விரும்பும் குடும்பங்கள் அநாமதேய பயன்பாட்டிற்காக உறைந்த விந்தணுவைக் கொண்டிருப்பதை அவர் வெளிப்படுத்தினார். இப்போது, அவர் தனது டிஎன்ஏவை பொதுவில் அணுகக்கூடியதாக மாற்ற திட்டமிட்டுள்ளார். இதனால் இந்த உயிரியல் குழந்தைகள் ஒருவருக்கொருவர் இணைய முடியும். துரோவ் ஆரோக்கியமான விந்தணு தானத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார் மற்றும் தனது கடமையை நிறைவேற்றுவதில் பெருமிதம் கொண்டார். ஆரோக்கியமான விந்தணு பற்றாக்குறையின் உலகளாவிய பிரச்சினை மற்றும் அதை நிவர்த்தி செய்வதில் அவரது பங்களிப்பை அவர் எடுத்துரைத்தார். "அதைத் தணிக்க நான் எனது பங்கைச் செய்ததில் பெருமைப்படுகிறேன்," என்று அவர் கூறினார்.