வடகொரிய அதிபருக்கு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட காரை பரிசளித்தார் ரஷ்ய அதிபர் புதின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின், "தனிப்பட்ட பயன்பாட்டிற்காக" ஒரு காரைப் பரிசளித்தார் என்று வட கொரிய அதிகாரப்பூர்வ ஊடகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் மற்றும் வட கொரியாவின் அணு ஆயுத வளர்ச்சி ஆகியவை பிற உலக நாடுகளிடம் இருந்த அந்த இரு நாடுகளையும் தனிமைப்படுத்தியுள்ளன. இதனை அடுத்து, மேற்கூறிய இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தியுள்ளன. கடந்த செப்டம்பர் மாதம், கிம் ஜாங் உன் மற்றும் புதின் சந்தித்ததில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான உறவுகள் உருவாக்கியுள்ளது.
"தனிப்பட்ட உறவுகளின் தெளிவான நிரூபணம்": வட கொரியா
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கார், பிப்ரவரி 18ஆம் தேதி கிம் ஜாங் உன்னின் உயர்மட்ட உதவியாளர்களுக்கு ரஷ்ய தரப்பால் வழங்கப்பட்டது என்று அதிகாரப்பூர்வ KCNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. "கிம் ஜாங் உன்னின் நன்றியை மரியாதையுடன் ரஷ்ய தரப்புக்கும் புடினுக்கும் கிம்மின் சகோதரி தெரிவித்தார், இந்த பரிசு உயர்மட்ட தலைவர்களுக்கு இடையிலான தனிப்பட்ட உறவுகளின் தெளிவான நிரூபணமாக செயல்படுகிறது" என்று KCNA கூறியுள்ளது. இந்த கார் குறித்த விவரத்தையோ, ரஷ்யாவில் இருந்து எப்படி அனுப்பப்பட்டது என்பது பற்றியோ அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. வட கொரிய அதிபர் கிம் ஒரு தீவிர ஆட்டோமொபைல் ஆர்வலர் என்று நம்பப்படுகிறது. கடத்தப்பட்டதாக நம்பப்படும் ஆடம்பர வெளிநாட்டு வாகனங்களின் பெரிய சேகரிப்பு அவரிடம் உள்ளதாக கூறப்படுகிறது.