
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 500 க்கும் மேல் அதிகரிப்பு
செய்தி முன்னோட்டம்
ஆப்கானிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியில், பாகிஸ்தான் எல்லைக்கு அருகே, திங்கட்கிழமை (செப்டம்பர் 1) அதிகாலை 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நில அதிர்வு மையம் (NCS) இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்திய நேரப்படி அதிகாலை 12:47 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 160 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் வடபகுதிகளிலும் உணரப்பட்டன. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், கட்டிடங்கள் குலுங்கியதால் பயந்துபோய் திறந்தவெளிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம், ஞாயிற்றுக்கிழமை இரவு 11.47 மணிக்கு கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வந்துள்ளது.
பலி
நிலநடுக்க பலி எண்ணிக்கை உயர்வு
இந்த நிலநடுக்கத்தில் ஆரம்பத்தில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 500 க்கும் மேல் உயர்ந்துள்ளது. மேலும் 1000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அங்குள்ள ஊடகங்களில் இருந்து தகவல் வந்துள்ளன. இதற்கிடையே, முதல் நிலநடுக்கத்திற்குப் பிறகு, ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 4.7, 4.3 மற்றும் 5.0 ரிக்டர் அளவிலான அதிர்வுகள் ஏற்பட்டன. இந்த அதிர்வுகள் 40 கி.மீ முதல் 140 கி.மீ வரையிலான ஆழங்களில் ஏற்பட்டன. ஆப்கானிஸ்தான், இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தட்டுகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இதன் காரணமாக, அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த நிலநடுக்கங்களின் தொடர் வரிசை, இப்பகுதிக்கு உடனடி பேரிடர் மேலாண்மை தயார்நிலையின் அவசியத்தை வலியுறுத்துகிறது.