பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள்: இந்தியா-பாக்.,அரசாங்கங்களுக்கு அமெரிக்கா வேண்டுகோள்
பயங்கரவாத எதிர்ப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கைகளுக்கு பதிலளித்த அமெரிக்கா, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா மற்றும் பாகிஸ்தானை ஊக்குவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது என்றாலும், இரு நாடுகளுக்கும் இடையே அமைதியான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். முன்னதாக ஒரு தேர்தல் பேரணியில் உரையாற்றிய பிரதமர் மோடி, "பயங்கரவாதிகள் அவர்களின் சொந்த வீடுகளில் அழிக்கப்பட்டனர்" என்று கூறிய சில நாட்களுக்குப் பிறகு அமெரிக்காவின் அறிக்கை வந்துள்ளது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தது என்ன?
கடந்த வாரம், ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், "பயங்கரவாதிகளை கொல்ல எல்லை தாண்டவும் இந்தியா தயங்காது" என்று தைரியமாக அறிவித்தார். அதோடு, "மோடியின் வலிமையான ஆட்சியில், பயங்கரவாதிகள் வீடுகளுக்குள் புகுந்து கொல்லப்படுகின்றனர். இந்தியாவின் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பயங்கரவாதிகளை அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது" என்றும் சிங் வலியுறுத்தினார். பாகிஸ்தானில் குறிவைக்கப்பட்ட கொலைகளை இந்தியா நடத்துவதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டதை அடுத்து இதனை ராஜ்நாத் சிங் தெரிவித்தார். எனினும் அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுகளும் "தவறான மற்றும் தீங்கிழைக்கும் இந்திய எதிர்ப்பு பிரச்சாரம்" என்று மறுத்தார்.
இந்தியாவின் கருத்திற்கு பாகிஸ்தான் ரியாக்ஷன்
இதற்கிடையே, இந்தியாவின் கருத்து ஆத்திரமூட்டும் வகையில் இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதுபோன்ற சொல்லாட்சிகள் எதிர்காலத்தில் உற்பத்தி ஈடுபாட்டிற்கான வாய்ப்புகளைத் தடுக்கிறது என்று பாகிஸ்தான் தெரிவித்தது. எனினும் இந்தியாவின் கருத்துகளை பொருட்படுத்தாமல், பிராந்திய அமைதிக்கான தனது அர்ப்பணிப்பை தொடரவுள்ளதாக பாகிஸ்தான் உறுதிப்படுத்தியது. அதோடு, இந்தியாவுடனான உரையாடலைத் தொடர விருப்பம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி,"அமெரிக்கா இதற்கு நடுவில் வரப்போவதில்லை. ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பதற்றநிலையை தவிர்க்கவும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் நாங்கள் ஊக்குவிக்கிறோம்." என மில்லர் கூறினார்.