
இஸ்ரேல் போருக்கு எதிர்ப்பு: இந்திய சுதந்திர போராட்ட முறையை பாராட்டி பேசிய சவுதி இளவரசர்
செய்தி முன்னோட்டம்
பாலஸ்தீனத்தில் நடந்து வரும் போருக்கு ஹமாஸ் மற்றும் இஸ்ரேலை கடுமையாக கண்டித்து பேசிய சவுதி இளவரசர் துர்கி அல் பைசல், இந்தியா சுதந்திரத்திற்கு போராடிய முறை தான் சரியானது என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பேக்கர் பல்கலைக்கழகத்தில் பேசிய அல் பைசல், "இந்தப் போரில் கதாநாயகர்கள் யாரும் இல்லை, பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே உள்ளனர்" என்றவர், ஆங்கில ஆட்சிக்கு எதிரான இந்தியாவின் ஒத்துழையாமை இயக்கத்தை சுட்டிக்காட்டினார்.
"பாலஸ்தீனத்தில் ராணுவத்தை பிரயோகப்படுத்துவதை நான் ஆதரிக்கவில்லை. உள்நாட்டு கிளர்ச்சி மற்றும் கீழ்ப்படியாமை தான் போராடுவதற்கு சரியான வழி. இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யமும், கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் பேரரசும் அதனால் தான் வீழ்ந்தது" என்று அவர் கூறியுள்ளார்.
2nd card
ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேலுக்கு இன அழிப்பில் ஈடுபட வாய்ப்பு அளித்து விட்டது- சவுதி இளவரசர்
அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலை கடுமையாக கண்டித்த பைசல், "ஹமாஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது போல, அப்பாவி பொதுமக்களை அவர்கள் இலக்காக்குவதை நான் திட்டவட்டமாக கண்டிக்கிறேன்."
"இத்தகைய தாக்குதல்கள் இஸ்லாமிய அடையாளத்திற்கான ஹமாஸின் கூற்றுக்களை பொய்யாக்குகிறது." என பேசினார்.
மேலும் அவர் ஹமாஸ் தாக்குதல், இஸ்ரேலுக்கு இன அழிப்பில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கி விட்டதாக விமர்சித்தார்.
இருந்த போதும் காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் குறித்து வெளிப்படையாக சவுதி இளவரசர் கண்டிக்கவில்லை.
அதேசமயம் இஸ்ரேல், பாலஸ்தீனியர்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
3rd card
மேற்கத்திய நாடுகளை கடுமையாக சாடிய சவுதி இளவரசர்
மேற்கத்திய நாடுகளை கடுமையாக சாடிய இளவரசர், அவர்கள் இஸ்ரேலில் மக்கள் கொல்லப்படும் போது மட்டும் கண்ணீர் வடிப்பதாகவும், பாலஸ்தீனர்கள் கொல்லப்படும் போது, அவர்கள் துக்கத்தைக் கூட வெளிப்படுத்த மறுக்கிறார்கள் என குற்றம் சாட்டினார்.
காசாவில் பாலஸ்தீனர்கள் கொல்லப்படுவது குறித்து பேசியவர், "ரத்தம் சிந்தப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்" என தெரிவித்தார்.
'அல் முகபாரத் அல் அம்மா' என்ற புலனாய்வு நிறுவனத்தை 24 ஆண்டுகளாக அல் பைசல் நடத்தி வந்தார்.
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சவுதி அரேபியாவின் தூதராகவும் பணியாற்றியுள்ள அல் பைசல், தற்போது எந்த விதமான அதிகாரப்பூர்வ பொறுப்புகளிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.