முஸ்லீம் அல்லாத தூதரக அதிகாரிகளுக்காக முதல் மதுபானக் கடையை திறக்கவுள்ளது சவூதி: அறிக்கை
சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில், அந்த அரசு தனது முதல் மதுபானக்கடையை திறக்கத் தயாராகி வருகிறது. ஆனால் இந்த சேவை முஸ்லீம் அல்லாத தூதர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என இந்தியா டுடே தெரிவித்துள்ளது. இந்த சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும். பின்னர், வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து அனுமதிக் குறியீட்டைப் பெற வேண்டும். மேலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள மாதாந்திர ஒதுக்கீட்டிற்குள் தான் வாங்கப்படவேண்டும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இஸ்லாம் மதத்தில், மது அருந்துவது தடைசெய்யப்பட்டுள்ளதால், அரேபிய நாடுகளில் மதுக்கடைகள் கிடையாது. தற்போது இந்த புதிய நடைமுறை, சுற்றுலா மற்றும் வணிகத்திற்காக சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையிலான அரசின் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
சுற்றுலாவை அதிகப்படுத்த திட்டம்
அரபு நாடுகள் எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பி இருக்காமல், சுற்றுலா மூலமும் பொருளாதாரத்தை உருவாக்க 'விஷன் 2030' என பல திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது சவூதி. அதன் ஒரு பகுதியாகவே இந்த மதுக்கடை திட்டமும் அமலுக்கு வருகிறது. புதிய கடை ரியாத்தின் தூதரகங்கள் மற்றும் இராஜதந்திரிகள் வசிக்கும் இடத்தில அமையவுள்ளது. இது கண்டிப்பாக முஸ்லீம் அல்லாதவர்களுக்கு மட்டுமே என்று வலியுறுத்தப்படும் என ஆவணம் தெரிவித்துள்ளது. எனினும், மற்ற முஸ்லீம் அல்லாத வெளிநாட்டினர் இந்த கடைக்கு அணுக முடியுமா என்பது குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை. சவூதி அரேபியாவில் மது அருந்துவதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. கசையடிகள், நாடு கடத்தல், அபராதம் அல்லது சிறைத்தண்டனை போன்றவை விதிக்கப்படுவது வழக்கம்.