இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை புகழ்ந்து தள்ளிய அமெரிக்க உயர் அதிகாரி
ஜோ பைடன் நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை "நம்பமுடியாத அளவிற்கு திறமையானவர்" என்றும், நவீன இந்திய-அமெரிக்க உறவுகளின் "கட்டமைப்பாளர்" என்றும் புகழ்ந்துள்ளார். அமெரிக்காவின் மேலாண்மை மற்றும் வளங்களுக்கான துணை செயலாளரான ரிச்சர்ட் வர்மா, இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இந்திய கலாசாரத்தின் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் வகையில், இந்திய தூதரகத்தில் கடந்த சனிக்கிழமை ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய ரிச்சர்ட் வர்மா வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை புகழ்ந்துள்ளார். ரிச்சர்ட் வர்மா, அமெரிக்க வெளியுறவுத்துறையில் பணியாற்றும் மிக உயர்ந்த அதிகாரத்தை கொண்ட ஒரு அமெரிக்க-இந்தியர் ஆவார்.
'இந்திய-அமெரிக்க உறவுகள் வலுவாக உள்ளது'
பராக் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக ரிச்சர்ட் வர்மா பணியாற்றி இருக்கிறார். மேலும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக பணியாற்றிய முதல் அமெரிக்க-இந்தியர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "வெளியுறவுத்துறை அமைச்சரின் தலைமை இல்லாவிட்டால், நமது உறவுகள்(அமெரிக்க-இந்திய உறவுகள்) இந்த அளவுக்கு வலுவானதாக இருந்திருக்காது" என்று தெரிவித்துள்ளார். மேலும், மகாத்மா காந்தியின் கொள்கைகளை நினைவு கூர்ந்த அவர், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் பகிரப்பட்ட சிந்தனைகள் மற்றும் பகிரப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.