உக்ரைன் போர்: கியேவ் மற்றும் கார்கிவ் மீது ரஷ்யா புதிய ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் தகவல்
இரண்டு நாட்களாக ரஷ்யா உக்ரைன் இடையே நடந்த பெரிய வான்வெளி தாக்குதல்களைத் தொடர்ந்து, மீண்டும் ஆளில்லா ரஷ்ய விமானங்கள் உக்ரைனின் கியேவ் மற்றும் கார்கிவ் பகுதிகளை தாக்கியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை இரவு குறைந்தது 20 நபர்களைக் கொன்ற உக்ரைன் தாக்குதலுக்கு பதிலடியாக, ரஷ்யா இந்த தாக்குதல்களை தொடுத்துள்ளது. வெள்ளியன்று உக்ரைன் முழுவதும் ரஷ்யா நடத்திய தாக்குதலில், குறைந்தது 39 நபர்கள் கொல்லப்பட்டனர். இது உக்ரைன் மீது ரஷ்யா இதுவரை நடத்திய மிக மோசமான தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் சமீபத்திய தாக்குதல்கள், குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் அலுவலகங்கள் மீது நிகழ்த்தப்பட்டதாக கார்கிவ் நகரின் மேயர் இஹோர் டெரெகோவ் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து உடனடித்தகவல்கள் வெளிவரவில்லை.
ரஷ்யா தாக்குதலால் தீவிரமடைந்த மோதல்
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம், உக்ரைன் மீது ரஷ்யா சிறப்பு ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. அப்போது முதல், இரு நாடுகளிடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதலுக்கு பின்னர் போர் தீவிரமடைந்தது. வெள்ளிக்கிழமை உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 39 நபர்கள் கொல்லப்பட்ட நிலையில், 160 பேர் காயமடைந்ததாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். இதற்கு பதிலடி வழங்கும் வகையில், ரஷ்யாவின் எல்லைப் பகுதியில் உள்ள பெல்கோரோட் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதில், 20 பேர் கொல்லப்பட்ட நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததில் இருந்து, அந்நாட்டின் மீது நடத்தப்படும் மிக கொடிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.