'பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு வருவதை மேற்கத்திய நாடுகள் பொறாமையுடன் பார்த்து கொண்டிருக்கின்றன': ரஷ்யா
22-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க அதிபர் புதினின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இன்று மாஸ்கோவுக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ளார். பிப்ரவரி 2022 இல் ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்த பிறகு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் ரஷ்யா பயணம் இதுவாகும். இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ரஷ்ய அரசாங்கம், பிரதமர் மோடி "ரஷ்யாவுக்கு வருவதை மேற்கத்திய நாடுகள் பொறாமையுடன் பார்த்து கொண்டிருக்கின்றன" என்று கூறியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகள் குறித்து இரு தலைவர்களும் மதிப்பாய்வு செய்வார்கள் என்றும், பரஸ்பர ஆர்வமுள்ள சமகால பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள் என்றும் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
ரஷ்ய-இந்திய உறவுகளுக்கு தேவையான முக்கியமான பயணம்
மாஸ்கோவில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் விரிவானதாக இருக்கும். மேலும் இரு தலைவர்களும் நட்பு ரீதியாகவும் பேசுவர் என்று ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். "வெளிப்படையாக, நிகழ்ச்சி நிரல் விரிவானதாக இருக்கும். இது பிரதமர் மோடிக்கு ஒரு அதிகாரபூர்வ விஜயமாக இருக்கும். மேலும் தலைவர்கள் நட்பு ரீதியாகவும் பேசுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம், "என்று அவர் கூறினார். "ரஷ்ய-இந்திய உறவுகளுக்கு இது மிகவும் முக்கியமான முழு அளவிலான விஜயமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று அவர் கூறியுள்ளார். மேலும், பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தை மேற்கத்திய நாடுகள் உன்னிப்பாகவும் பொறாமையுடனும் கவனித்து வருகிறது என்று பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.