பால்டிமோர் பால விபத்து: கப்பலில் இருந்த இந்திய பணியாளர்களை கேலி செய்யும் 'இனவெறி' கார்ட்டூன் வெளியீடு
அமெரிக்காவில் உள்ள பால்டிமோர் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தில் கட்டுப்பாட்டை மீறிய ஒரு சரக்குக் கப்பல் மோதியதால் 6 பேர் உயிரிழந்ததாகக் கருதப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட பலர் கப்பலில் இருந்த இந்திய பணியாளர்களை பாராட்டி வரும் நிலையில், அந்த சம்பவத்தை சித்தரிக்கும் 'இனவெறி' கார்ட்டூன் ஒன்று இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சிங்கப்பூரின் கொடியேற்றப்பட்ட டாலி என்ற கொள்கலன் கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை மின்சாரத்தை இழந்து பால்டிமோர் பாலத்தை தாங்கி கொண்டிருந்த ஒரு கான்கிரீட் தூணில் மோதியது. இதனால், சில நொடிகளில் ஏறக்குறைய அந்த முழு பாலமும் இடிந்து விழுந்தது.
இந்திய பணியாளர்களை பாராட்டிய அதிபர் ஜோ பைடன்
ஆனால், இந்த விபத்து ஏற்படுவதற்கு முன் வேகமாக செயல்பட்ட அந்த கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள் விரைவாக அமெரிக்க அதிகாரிகளுக்கு அவசர அழைப்பு விடுத்தனர். அதனை தொடர்ந்து, அந்த பாலத்தின் வழியாக செல்லும் போக்குவரத்துகள் உடனடியாக நிறுத்தப்பட்டது.அந்த இந்திய பணியாளர்களின் விவேக செயலால் தான் பல உயிர்களை காப்பாற்ற முடிந்தது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட பல முக்கிய அதிகாரிகள் அவர்களை பாராட்டியுள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு வெப்காமிக் இந்த சம்பவத்தை சித்தரிக்கும் ஒரு கார்ட்டூனைப் பகிர்ந்துள்ளது. அந்த கார்ட்டூனில், இடுப்பில் மட்டுமே ஆடை அணிந்த, ஒழுங்கற்ற மனிதர்கள் இந்தியர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். அதனால் இந்த சம்பவம் பெரும் சர்ச்சையாகி உள்ளது.