இந்தியாவை திசை திருப்பும் முயற்சி அர்த்தமற்றது- மேற்கு உலகுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை
"இந்தியாவை ரஷ்யாவிடம் இருந்து திசை திருப்பும் முயற்சிகள் அர்த்தமற்றது. இந்தியா ஒரு சுதந்திர நாடு" என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் நடைபெற்ற வால்டாய் கலந்துரையாடல் மன்ற நிகழ்வில், ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்றார். அதில் இந்தியாவை ரஷ்யாவிடம் இருந்து திசை திருப்பும் முயற்சிகள் அர்த்தமற்றது என மேற்கு உலக நாடுகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் "மேற்குலக நாடுகள் அவர்களின் கொள்கையுடன் ஒத்துப்போகாத எல்லோரையும் எதிரியாக்க முயற்சிக்கிறார்கள். எல்லோரும் ஆபத்தில் உள்ளார்கள்- இந்தியாவும் கூடத்தான்" "ஆனால் இந்தியாவின் தலைமை, அந்நாட்டின் நலன்களுக்காக சுதந்திரமாக செயல்படுகிறது" என பேசினார்.
இந்தியாவையும் பிரதமர் மோடியையும் புகழ்ந்த புதின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சமீப காலமாக இந்தியாவையும், பிரதமர் மோடியையும் தொடர்ந்து புகழ்ந்து வருகிறார். "இந்தியா 1.5 மில்லியன் ஜனத்தொகை கொண்ட நாடு. உலக பொருளாதார உற்பத்தியில் 7% இந்தியாவிலிருந்து கிடைக்கிறது." "அது ஒரு சக்தி வாய்ந்த மற்றும் பலமான நாடு. அது மென்மேலும் வலிமையானதாக பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் வளர்கிறது" என பேசினார். உக்ரைனுக்கு எதிரான போரை முழுவீச்சில் தொடங்கியதில் இருந்து ரஷ்ய அதிபர் ரஷ்யாவை விட்டு அதிகமாக வெளியேறவில்லை. சமீபத்தில் நடந்த பிரிக்ஸ்(BRICS) மற்றும் ஜி- 20(G-20) மாநாடுகளையும் தவிர்த்து இருந்தார். இது குறித்துப் பேசிய அவர், அரசியல் ரீதியான நடவடிக்கைகளை ஏற்படுத்த விரும்பாததால் அவற்றை தவிர்த்ததாக கூறியிருந்தார்.