வாழ்க்கை செலவின உயர்வை எதிர்த்து ஐரோப்பாவில் கொதித்தெழுந்த மக்கள்; வன்முறையாக மாறிய மாபெரும் போராட்டங்கள்
செய்தி முன்னோட்டம்
வாழ்க்கைச் செலவின உயர்வு, வீட்டு வசதி நெருக்கடி, கல்வி மற்றும் பொதுச் சேவைகளைக் கண்டித்து ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், அல்பேனியா, இத்தாலி, போர்ச்சுகல் மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகளில் மாபெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. குறிப்பாக, பிரான்ஸ் மற்றும் அல்பேனியாவில் வார இறுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பிரான்ஸ் முழுவதும் வாழ்க்கைச் செலவின உயர்வு மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராக நூறாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் பாரிஸில் காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளைப் பயன்படுத்தியதோடு, மோதல்கள் தீவிரமடைந்தன.
வன்முறை
பொதுச் சொத்துக்கள் சேதம்
லிமோஜஸ் மற்றும் மார்சேய் நகரங்களில் உள்ள நகராட்சி அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
பாரிஸில் உள்ள பிரபல காலேஸ் லாபயட் வணிக வளாகத்திற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள், வங்கிகள் மற்றும் கடைகளை அடித்து நொறுக்கி சூறையாடினர்.
வன்முறை செயல்களுக்கு கண்டனம் தெரிவித்த அதிபர் இம்மானுவேல் மேக்ரான், வன்முறையில் ஈடுபட்டவர்கள் கடுமையான சட்ட நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் எனத் தெரிவித்தார்.
நாடு முழுவதும் நடைபெற்ற மோதல்களில் 1,500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அல்பேனியா
அல்பேனியாவில் பிரதமர் பதவி விலகக் கோரி தொடரும் போராட்டம்
அல்பேனியா தலைநகர் டிரானாவில் பிரதமர் எடி ராமா பதவி விலகக் கோரி ஐந்தாவது நாளாகத் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.
போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்கள், பெட்ரோல் குண்டுகள் மற்றும் பட்டாசுகளை வீசித் தாக்கினர்.
பதிலுக்கு காவல்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் செய்தனர்.
உச்ச நீதிமன்றம் மற்றும் வங்கிகள் போன்ற பொதுக் கட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டதால் ஏராளமானோர் காயமடைந்தனர்.
தெற்கு கடற்கரையில் அமெரிக்க அதிபரின் உறவினர் நிறுவனத்துடன் தொடர்புடைய சொகுசு சுற்றுலாத் திட்டத்திற்கு எதிரான அதிருப்தியும் இந்தப் போராட்டங்களுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி
பிற ஐரோப்பிய நாடுகளில் எதிரொலிக்கும் பொருளாதார நெருக்கடி
இத்தாலியின் மிலன் மற்றும் பலூக்னா நகரங்களில் உணவுப் பொருட்கள் மற்றும் வாழ்க்கை செலவின உயர்வை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் வன்முறையில் முடிந்தன.
மேலும், போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் வீடுகளின் விலை உயர்வைக் கண்டித்து நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் கல்விச் செலவின உயர்வை எதிர்த்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் காவல்துறையினருடன் மோதல்களில் ஈடுபட்டனர்.
பல்வேறு காரணங்களுக்காகத் தொடங்கியுள்ள இந்த போராட்டங்கள் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நிலைத்தன்மை மீது பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளன.