இளவரசி கேட் மிடில்டனின் புதிய வீடியோவும் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதா? இணையவாசிகள் மீண்டும் சந்தேகம்
இங்கிலாந்தின் இளவரசி கேட் மிடில்டன், புற்றுநோய்க்காக கீமோதெரபி செய்து வருவதாக கடந்த வாரம் ஒரு வீடியோ செய்தியில் அறிவித்து, அவர் உடல்நலன் பற்றிய பரவலான ஊகங்கள் மற்றும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். எனினும் அவரது வீடியோ "செயற்கை நுண்ணறிவு (AI) செயல்படுத்தப்பட்ட டீப்ஃபேக்" ஆக இருக்கலாம் என்று தற்போது மற்றொரு சந்தேக பூதம் ஆன்லைனில் கிளம்பியுள்ளது. கடந்த ஜனவரி மாதம், கேட் மிடில்டன் வயிற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதிலிருந்து, வெளி உலகிற்கு வராமல் இருந்தார். அதோடு அவர் வெளியிட்ட மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம், அவரை பற்றி வினோதமான செய்திகளுக்கு வழிவகுத்தது எனலாம். அதனை மறுக்கும்விதமாக, கடந்த மார்ச் 23 அன்று, இளவரசி கேட் வெளியிட்ட வீடியோவில் தான் புற்றுநோய் சிகிச்சையில் இருப்பதை வெளிப்படுத்தினார்.
டீப் ஃபேக் வீடியோ என இணையவாசிகள் கருத்து
வீடியோவில், இளவரசி கேட், வின்ட்சர் அரண்மனையின் தோட்டத்தில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருப்பதை போலவும், பின்னணியில் செர்ரி பூக்கள் மற்றும் டாஃபோடில்ஸ்கள் போது குலுங்குவது போலவும் உள்ளது. அந்த வீடியோவில் தான் புற்றுநோய் பாதிப்பின் ஆரம்பகட்டத்தில் இருப்பதாகவும், தடுப்புமுறை கீமோதெரபி செய்து வருவதாகவும் தெரிவித்தார். இருப்பினும், அந்த வீடியோ செய்தி சமூக ஊடகங்களில் புதிய சந்தேகங்களுக்கு வழிவகுத்தது. அதில் இடம்பெற்றுள்ள காட்சிகள் "AI- இயக்கப்பட்ட டீப்ஃபேக்" ஆக இருக்கலாம் என்று பயனர்கள் கருதுகின்றனர். சில பயனர்கள் ஏன் இலைகள் மற்றும் புற்கள் நகரவில்லை என்று கேள்வி எழுப்பினர். இன்னும் சிலர், பொதுவாக இளவரசியின் கன்னக்குழி இல்லாததையும் கேள்வி எழுப்பினர்.