இந்தியாவின் வெளிநாட்டுக் குடியுரிமைக்கான தகுதி நீட்டிப்பு: குடியரசு தலைவர்
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், பல இந்தியர்கள் "வேலைக்காக" பிற பிரிட்டிஷ் காலனிகளுக்கு அனுப்பப்பட்டனர். அந்த வரிசையில் 150 ஆண்டுகளுக்கு முன் உத்தரப்பிரதேசம், பீகார், ஹரியானா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களை சேர்ந்த பலர் சுரினாமில் உள்ள டச்சுக் காலனிக்கு வேலைக்கு சென்றனர். அந்த காலனியில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட பிறகு, அங்கு வேலைக்காக சென்ற இந்தியர்கள் அந்த நாட்டிலேயே தங்கிவிட்டனர். தற்போது, தென் அமெரிக்க நாடான சுரினாமில் 27.4% இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியர்கள் சுரினாமுக்கு சென்று 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற கலாச்சார விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும், சுரினாம் அதிபர் சந்திரிகா பர்சாத் சந்தோகியும் இன்று கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் போது இந்திய குடியரசு தலைவர் கூறியதாவது:
1873ஆம் ஆண்டு முதன்முதலில் இந்தியர்கள் கப்பல் மூலமாக சுரினாமுக்கு அழைத்துவரப்பட்டனர். அடுத்த சில தசாப்தங்களில் 34,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சுரினாமுக்கு வந்தனர். சுரினாமுக்கு இந்தியர்கள் வந்து 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாட இன்று நாம் அனைவரும் இங்கு கூடியுள்ளோம். இது சுரினாமின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாக கருதப்படுகிறது. இன்று இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில், இந்தியாவின் வெளிநாட்டுக் குடியுரிமைக்கான தகுதியை நீட்டிக்க எனது அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நான்காவது தலைமுறையிலிருந்து ஆறாவது தலைமுறையினர் வரை இனி OCI அட்டையை பெற்றுக்கொள்ளலாம். முதல் கப்பலில் சுரினாமுக்கு வந்த மூதாதையர்களின் வம்சாவளிகளும் இனி OCI கார்டைப் பெற்றுக்கொள்ளலாம். என்று கூறியுள்ளார்.