'பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்': மாலத்தீவு அதிபருக்கு எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தல்
மாலத்தீவு ஜும்ஹூரி கட்சியின் (ஜேபி) தலைவர் காசிம் இப்ராஹிம், மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களிடம் முறையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியதாக மாலத்தீவு டிஜிட்டல் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. "எந்தவொரு நாட்டைப் பற்றியும், குறிப்பாக அண்டை நாடு, உறவைப் பாதிக்கும் வகையில் நாம் பேசக்கூடாது. நமது மாநிலத்திற்கு நாம் செய்ய வேண்டிய கடமை உள்ளது. அதைக் கருத்தில் கொள்ள வேண்டும். முன்னாள் ஜனாதிபதி சோலி இதை பரிசீலித்தே, 'இந்தியாவை வெளியேற்றும்' பிரச்சாரங்களை தடை செய்து ஆணை பிறப்பித்தார்" என்று அவர் கூறினார்.
"மோடியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்"
மேலும், "ஜனாதிபதி முய்ஸு, சீனப் பயணத்திற்குப் பிறகு இந்தியாவிற்கு எதிராக அவர் கூறிய கருத்துக்கு இந்திய அரசு மற்றும் பிரதமர் மோடியிடம் முறைப்படி மன்னிப்பு கேட்க வேண்டும்" எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு தொடக்கத்தில், அப்போதைய மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் சோலி, எதிர்க்கட்சிகளின் 'இந்தியா அவுட்' பிரச்சாரம் "தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்" என்று கூறி அதை தடை செய்து அரசாணை பிறப்பித்தார். மேலும், பிரச்சார பதாகைகளை அகற்றவும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டார். மாலத்தீவில் இந்திய துருப்புக்களை அகற்றுவது தான், ஜனாதிபதித் தேர்தலின் போது முய்சு கட்சியின் முக்கிய பிரச்சார திட்டமாக இருந்தது. முய்சு, மாலத்தீவில் செப்டம்பரில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியாவிற்கும், மாலத்தீவிற்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன.