11வது முறை, ரகசிய பாதுகாப்பு ஏஜென்டை கடித்த அமெரிக்க அதிபர்-இன் வளர்ப்பு நாய்
'கமாண்டர்' என பெயரிடப்பட்டுள்ள, ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வளர்ப்பு நாய், பாதுகாப்பு ஏஜென்டை கடிப்பது இது பதினோராவது முறையாகும். இந்த சம்பவம் திங்கட்கிழமை இரவு நடைபெற்றதாகவும், அந்த ஏஜென்ட்க்கு உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதாகவும், ரகசிய பாதுகாப்பு சேவை செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்தது. வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர், வெள்ளை மாளிகையில் வசிப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தால் இந்த தாக்குதல்கள் நடைபெறுவதாக கூறியிருந்தார். "உங்கள் அனைவருக்கும் தெரிந்தது மாதிரி, வெள்ளை மாளிகை ஒரு தனித்துவமான, மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கூடிய இடம்" "மனிதர்களுக்கே அவ்வாறு இருக்கும் போது, விலங்குகள் குறித்து நீங்கள் கற்பனை செய்து பார்க்க வேண்டும்" என பேசி இருந்தார்.
வெள்ளை மாளிகையில் தொடரும் நாய் தாக்குதல்கள்
அமெரிக்க அதிபர் பைடன், இரண்டு ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய்களை வளர்த்து வருகிறார். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 'கமாண்டர்' எனப் பெயரிடப்பட்ட நாய், கடந்த 2021 ஆம் ஆண்டு வெள்ளை மாளிகைக்கு வந்தது. அதிபர் பைடனின் சகோதரரான ஜேம்ஸ், கமாண்டரை அதிபருக்கு பரிசளித்தார். பணியில் இருக்கும் ஏஜெண்டுகளை, அதிபரின் நாய் கமாண்டர் கடிப்பது இது முதல் முறை அல்ல. கமாண்டர் ஏற்கனவே பணியிலிருந்த 10 ஏஜெண்டுகளை கடித்துள்ளது. டிசம்பர் 11 2022 ஆம் தேதி, அதிபர் பைடன் கண் முன்னே, ஒரு ஏஜென்டின் முன்கை மற்றும் கை கட்டைவிரலை கமாண்டர் கடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.