Page Loader
பிரதமர் மோடி, ரிஷி சுனக் சந்திப்பு: ஜப்பானில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய தலைவர்கள்
பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமருடன் உரையாடுவது போன்ற படங்களை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார்.

பிரதமர் மோடி, ரிஷி சுனக் சந்திப்பு: ஜப்பானில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய தலைவர்கள்

எழுதியவர் Sindhuja SM
May 21, 2023
05:46 pm

செய்தி முன்னோட்டம்

ஹிரோஷிமாவில் இன்று(மே-21) நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்திய-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம், புத்தாக்கம், அறிவியல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான விரிவான மூலோபாய கூட்டுறவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமருடன் உரையாடுவது போன்ற படங்களை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். "ஹிரோஷிமா ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் நடந்தது." என்றும் பிரதமர் மோடி ட்விட்டரில் கூறியுள்ளார். இந்த இடுகையை ட்விட்டரில் பகிர்ந்த பிரிட்டிஷ் தூதரகம் "ஒரு வலுவான நட்பு" என்று அதற்கு கேப்ஷன் இட்டிருந்தது.

details

பல்வேறு உலக தலைவர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி

"இரு தலைவர்களும் இந்தியா-இங்கிலாந்து FTA பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து பேசியது மட்டுமல்லாமல் அவர்களின் விரிவான மூலோபாய கூட்டாண்மையை மதிப்பாய்வு செய்தனர். வர்த்தகம் மற்றும் முதலீடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், உயர்கல்வி மற்றும் மக்களிடையேயான உறவுகள் போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்." என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தற்போது ஜப்பான் சென்றுள்ளார். மேலும், பிரதமர் மோடி பல்வேறு உலக தலைவர்களை நேற்று சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் உக்ரைன் அதிபர், அமெரிக்க அதிபர், பிரெஞ்சு அதிபர், இந்தோனேசிய அதிபர், ஜெர்மன் சான்சிலர் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளர் ஆகியோர் அடங்குவர்.