
ஐநா பொதுச் சபை கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்பார் என அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்த ஆண்டுக்கான ஐநா சபையின் 80 வதுபொதுச் சபை கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட பேச்சாளர்களின் பட்டியலில், அவருக்குப் பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் கலந்துகொண்டு, செப்டம்பர் 27 அன்று உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிரதமர் மோடி செப்டம்பர் 26 அன்று உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கும் இந்த ஆண்டுக்கான ஐநா பொதுச் சபை கூட்டம், இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் உக்ரைன் மோதல் போன்ற முக்கிய உலகப் பிரச்சனைகளுக்கு மத்தியில் நடைபெறுகிறது. செப்டம்பர் 23 முதல் 29 வரை நடைபெறும் இந்த விவாதங்களில், பிரேசில் வழக்கம் போல் முதல் பேச்சாளராக உரையாற்றும்.
டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உரை
பிரேசிலைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் ஐநா உரையை நிகழ்த்துவார். செப்டம்பர் 26 அன்று இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் தலைவர்களும் உரையாற்றவுள்ளனர். இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், உலக அமைதி, வளர்ச்சி மற்றும் பன்முக ஒத்துழைப்பு போன்ற முக்கிய விஷயங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான ஐநா பொதுச் சபையின் மையக்கருத்து, 'அமைதி, வளர்ச்சி மற்றும் மனித உரிமைகளுக்காக 80 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலும்' என்பதாகும். இந்தக் கூட்டத்தில், பருவநிலை உச்சி மாநாடு, பாலின சமத்துவம், பொருளாதார நிலைத்தன்மை, செயற்கை நுண்ணறிவு மேலாண்மை மற்றும் சுகாதாரம் குறித்த பல்வேறு உயர்மட்ட விவாதங்களும் நடைபெறவுள்ளன.